பக்கம்:நித்திலவல்லி.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

நித்திலவல்லி / முதல் பாகம்


உண்டு முடித்தபின் தேனூர் மாந்திரீகன் படுத்திருந்த கட்டிலருகே அமர்ந்து திருத்துழாய் மாலையில் வந்த ஓலையை வைத்துக்கொண்டு மேலே என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் அவர்கள். நீண்ட நேரம் சிந்தித்தும் எதையும் திட்டமிட முடியவில்லை. அழகன் பெருமாள் செங்கணானின் கட்டிலருகே இருந்த மஞ்சத்தில் உறக்கச்சென்றான்.

அன்று செங்கணான் புதிதாக வந்திருந்ததனால் இளைய நம்பிக்குத் தான் எந்தக் கட்டிலில் படுத்து உறங்குவது என்ற தயக்கம் வந்தது. செங்கணானுக்கு அருகிலிருந்த கட்டிலில் அவனுக்குத் துணையாயிருக்கும் எண்ணத்தோடு அழகன் பெருமாள் படுத்துவிட்டதால் அவனை அங்கிருந்து எழுப்பு வதற்கு இளைய நம்பி விரும்பவில்லை. அவனது தயக்கத்தைக் குறிப்பறிந்த இரத்தினமாலை, “இந்த மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு சயனக்கிருகம் இருக்கிறது, நிலாவின் தண்மையையும், தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவித்த படி உறங்கலாம் அங்கே...” என்றாள். அவன் மறுக்க வில்லை... அவள் அவனை மேலே அழைத்துச் சென்றாள்.


34. மணக்கும் கைகள்

மாளிகையில் எல்லாரும் உறங்கிவிட்ட நிலையில் தனியாக இரத்தினமாலையோடு மேல் மாடத்திற்குச் சென்றான் அவன். தன்னை மேல் மாடத்திற் கொண்டு போய் விட்டுவிட்டு, அவள் உடனே திரும்பி விடுவாள் என்று நினைத்தான் இளையநம்பி. அவளோ மேல் மாடத்தில் இருந்த பள்ளியறையை ஒட்டி அமைந்த நிலா முற்றத்தில் நின்று அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/195&oldid=715380" இலிருந்து மீள்விக்கப்பட்டது