பக்கம்:நித்திலவல்லி.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

நித்திலவல்லி / முதல் பாகம்



டார்கள். பெரியகாராளரின் விருந்தினனாகத் தங்கியிருந்த தென்னவன் சிறுமலைப் பிள்ளையாண்டானும், அறக்கோட்டத்து மல்லனும் தந்திரமாக நடந்து கொள்ளத் தோன்றாமல் களப்பிரப் பூதபயங்கரப் படையினரை எதிர்த்து, உணர்ச்சி வசப்பட்டுப் போரிட முயன்றதால், எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். காராளரும் அவர் குடும்பத்தினரும் மாளிகையோடு சிறை வைக்கப்பட்டது போல், முடக்கப்பட்டு விட்டார்கள். உடனே இரவோடு இரவாக நானும் ஆபத்துதவிகளும் முனையெதிர் மோகர் படையினரும் மோகூரிலிருந்து வேறு திசையில் புறப்பட்டுக் குடி பெயர்ந்து விட்டோம். காராளரின் நிலைமைதான் இரங்கத்தக்கதாகி இருக்கிறது; பாண்டியகுலம் தலையெடுக்க உதவிய அந்த உபகாரிக்குச் சோதனை நேர்ந்திருக்கிறது. அவருடைய களஞ்சியங்களிலிருந்து அரண்மனைக்கு நெல் எடுத்துச் செல்லும் வண்டிகளைக் கூட இப்போது களப்பிரர்களே கோட்டைக்குள் ஒட்டிச் செல்கிறார்களாம். அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லனுப்புகிறவர் என்பதனால் அவர் மேல் களப்பிரர்களுக்கு இருந்த அன்பும், பிரியமும் கூட மாறி விட்டதாம். ஆனாலும் இவ்வளவு நாள் தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வரையாமல் வாரி வழங்கிய ஒரு வள்ளலைத் திடீரென்று கடுமையாகத் தண்டிக்கவும் மனம் வராமல் மாளிகையை விட்டு வெளியேற முடியாமல் கண்காணிக்கிறார்களாம். இந்த நிலையில் எனக்கும், அவருக்கும் நடுவே அறியவும் அறிவிக்கவும் பயன்படும் ஒரே பொது மனிதன்தான் திருமோகூரில் எஞ்சியிருக்கிறான். உழவர்களின் கலப்பைக்குக் கொழு அடிக்கும் அந்தக் கொல்லன் தன் மேல் களப்பிரர்களின் கண்கள் சந்தேகமுற்று விடாதபடி மிக மிகச் சாதுரியமாக இருக்கிறான். இப்போது நான் இருக்கும் புதிய இடத்திற்கு அவனை வரவழைத்து, அவனிடம் இந்த ஓலைகளைக் கொடுத்து, முதலில் காராளரை இதைப் படிக்கச் செய்துவிட்டுப் பின்பு அவரிடமிருந்து மீண்டும் வாங்கி, உன்னிடம் இதைக் கொண்டு வந்து சேர்க்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எழுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/209&oldid=945275" இலிருந்து மீள்விக்கப்பட்டது