பக்கம்:நித்திலவல்லி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

நித்திலவல்லி / முதல் பாகம்


கேட்டால் பதில் சொல்வார்கள்'-என்று பேசியிருந்த பேச்சின் புதிர் இளைய நம்பிக்கு இப்போது விளங்கிற்று.

“பெண்ணே! உனக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். அந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ள அளவும் நீ பெருமைப்பட முடியும்...”

இளைய நம்பியின் இந்த நன்றியைக் கேட்டு அவள் புன் முறுவல் பூத்தாள். இந்தப் புன்முறுவலின் அழகு பாதாதி கேசபரியந்தம் விரைந்து பரவி நிறைவதைப்போல் தெரியும் இனிய பிரமையிலிருந்து அவன் விடுபடச் சில கணங்கள் ஆயிற்று.

பதிலுக்குப் புன் முறுவல் பூத்தபடி, ‘கயல்’ என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தித் தன் குரலைத் தணித்து, “உன் கண்களைச் சொல்லவில்லை? எனக்கு வழி பிறக்கும் நல்லடையாளச் சொல்லைத்தான் கூறுகிறேன்” என்றான். இதைக் கேட்டு அவள் முகத்தில் நாணம் நிறைந்தது.

“நேர் எதிரே தெரியும் ஒற்றையடிப் பாதையில் கால் நாழிகைத் தொலைவு சென்றால் ஒரு பெரிய ஆலமரம் வரும். அங்கே அவரைக் காணலாம். ஆனால் அந்த இடத்தை அடை கிறவரை நல்லடையாளச் சொல் பலமுறை உங்களுக்குத் தேவைப்படும்” என்று கூறி விட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றாள் அந்தப் பெண்.


2. மதுராபதி வித்தகர்

அந்தப் பெண் தன்னை எச்சரித்துவிட்டுச் சென்றது எவ்வளவிற்குப் பயன் நிறைந்தது என்பதை அந்தப் பாதையில் சிறிது தொலைவு நடந்ததுமே இளைய நம்பி புரிந்துகொள்ள நேர்ந்தது. கயல் என்னும், அந்த நல்லடையாளச் சொல்லின் மந்திர சக்தியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/21&oldid=715002" இலிருந்து மீள்விக்கப்பட்டது