பக்கம்:நித்திலவல்லி.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

211


 அரைக்கும் பகுதிக்குச் சென்றான் இளையநம்பி. கொல்லன் பின் தொடர்ந்து வந்தான்.

ஆனால் சந்தனம் அரைக்கும் பகுதியிலும் அவர்களுக்குத் தனிமை வாய்க்கவில்லை. அங்கே நிலவறை வழிக்குக் குறளன் காவலாக இருந்தான். குறளனைச் சில கணங்கள் புறத்தே விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்ட பின், திருமோகூர்க் கொல்லனை உள்ளே அழைத்தான் இளைய நம்பி; உள்ளே வந்ததுமே இளையநம்பி எதிர் பார்த்தது போல் உடனே ஓலையை எடுத்து நீட்டி விடவில்லை அவன்.

“ஐயா! இந்த ஓலையைக் கொடுப்பதற்கு முன் நான் ஏன் இவ்வளவு எச்சரிக்கையும், பாதுகாப்பும் தேடுகிறேன் என்று நீங்கள் வியப்பு அடையலாம். இதை யார் என்னிடம் சேர்த்தார்களோ அவர்களுடைய விருப்பம் அப்படி! அந்த விருப்பத்தைக் காப்பாற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.”

“புரியும்படியாக விளக்கிச் சொல்! ‘நீ என்ன கடமைப் பட்டிருக்கிறாய்? யாருக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்?’ என்பதை எல்லாம் என்னால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.”

“அரசியற் கடமைகளைவிட அன்புக் கடமை சில வேளைகளில் நம்மை அதிகமாகக் கட்டுப்படுத்தி விடுகிறது ஐயா!”

“பாயிரமே[1] பெரிதாகயிருக்கிறதே அப்பனே! சொல்ல வேண்டியதைச் சொன்னால் அல்லவா, இவ்வளவு பெரிய பாயிரம் எதற்கென்று புரியும்?”

“கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! பெரியவரைக் காண்பதற்கு அவர் இருப்பிடம் செல்லுமுன் மாளிகையோடு மாளிகையாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் திருமோகூர்ப் பெரிய காராள வேளாளரைச் சந்திக்க முயன்றேன். பூத பயங்கரப் படையினர் முதலில் கடுமையாக மறுத்தார்கள். அந்தப் படையினரை என்னை நம்ப வைப்பதற்காக, என் உலைக் களத்தில் அவர்கள் வாள், வேல்களைச் செப்பனிடும்


  1. முன்னுரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/212&oldid=945268" இலிருந்து மீள்விக்கப்பட்டது