பக்கம்:நித்திலவல்லி.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

நித்திலவல்லி / முதல் பாகம்



“இன்னும் சிறிது நேரம் உன்னைப் பேச விட்டால், எது எதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டியிருக்குமோ அதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பே இல்லாமல் நீயாகவே உன்னைப் பாராட்டிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறதே? பாராட்டை எதிர்பார்க்கலாம். ஆனால் வற்புறுத்தவோ, கோரிக்கை செய்யவோ கூடாது அப்பனே!”

“இப்படிக் காரியங்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று முடிவு செய்த முதல் நாளிலிருந்தே, அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் ஐயா! ஒரு விளையாட்டுக்காக அப்படி வேண்டியதை நீங்கள் என் விருப்பமென்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது.”

“விளையாட்டு இருக்கட்டும்! இந்த ஓலையைப் படிக்குமுன் எனக்குச் சில நிலைமைகள் தெரியவேண்டும், சொல்வாயா?”

“தாங்கள் கேட்பவற்றிற்குப் பணிவோடும் உண்மையோடும் மறுமொழி சொல்ல, நான் கடமைப் பட்டிருக்கிறேன் ஐயா!”

“பெரியவர் இப்போது மாறிப் போய்த் தங்கியிருக்கும் ஊரையோ, இடத்தையோ எனக்கு மட்டும் சொல்லேன். உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு...”

“தங்களைவிட நான் பெரியவருக்கு இன்னும் அதிகமாகக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது என்னைக் கேட்பது போல்தான் பெரிய காராளரும், பெரியவருடைய ஓலையைப் படித்து முடித்ததும் என்னைக் கேட்டார். அவரிடமும் இதே மறுமொழியைத்தான் நான் கூறினேன். பெரியவரே யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயல்வது உங்களுக்கு அழகில்லை...”

“அது போகட்டும்! நீ கருங்கல்லைப் போன்றவன். உன்னைப் போன்ற கருங்கல்லிலிருந்து நார் உரிக்க முடியாது. பெரிய காராளர் மாளிகையைக் காவலிருக்கும் பூதபயங்கரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/215&oldid=945271" இலிருந்து மீள்விக்கப்பட்டது