பக்கம்:நித்திலவல்லி.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

215



படை வீரர்களால் அவருக்கு ஏதேனும் கெடுதல்கள் உண்டா? இல்லை வெறும் காவல் மட்டும் தானா?”

“கெடுதல்கள் எதுவும் கிடையாது! சொல்லப் போனால், காராளரை அவர்கள் இன்னும் மதிக்கவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. காராளர் வீட்டைச் சுற்றி அவர்கள் விரித்திருக்கும் வலை காராளருக்காக அல்ல.”

“பின் யாருக்காக என்று நினைக்கிறாய்?”

“உங்களுக்காக, எனக்காக, இன்னும் அவரைத் தேடி வந்து போகிறவர்களில் யார் யார் களப்பிரர்களுக்கு எதிரிகளோ, அவர்கள் எல்லாருக்காகவும் தான்!”

“அப்படியானால், உன்னை ஏன் இன்னும் அவர்கள் ஆபத்தானவனாகக் கருதவில்லை?”

“அது என் சாதுரியத்தையும், அவர்களுடைய சாதுரியக் குறைவையும் காட்டுகிறது.”

“இனி என்னை நம்பிப் பயனில்லை என்று இப்போது உன்னை நீயே புகழ்ந்து கொள்ளத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது அப்பனே!”

“வஞ்சப் புகழ்ச்சி எனக்கு வேண்டியதில்லை ஐயா! இன்று வரை களப்பிரர்கள் நம்பும்படியாக நான் நடந்து கொள்கிறேன். அவர்கள் சந்தேகமும் சோதனையும் தீவிரமானால், அவர்களிடமிருந்து நானும் தப்ப முடியாது.

காராளர் மகள் இன்னும் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போட மாலை வேளைகளில் போய் வருகிறாளே! அவளை யாரும் தடுப்பதில்லை.”

“அப்படியானால் இந்த ஓலையைப் படித்தபின் தேவைப்படும் என்று நான் விரும்புகிற பட்சத்தில், ஒரு மறுமொழி ஓலை கொடுத்தால், நீ அதனை அவளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் சிரமம் எதுவும் இராதல்லவா?”

“சிரமம் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒரு வேளை சிரமங்கள் இருந்தாலும், அதைச் செய்ய நான் பின் வாங்கவோ தயங்கவோ மாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/216&oldid=945272" இலிருந்து மீள்விக்கப்பட்டது