பக்கம்:நித்திலவல்லி.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

21


யும் அவன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இருபுறம் மரங்கள் அடர்ந்து செழித்திருந்த பாதையின் மருங்குகளில் அங்கங்கே உருவிய வாளுடன் நின்ற வீரர்கள் அவன் ‘கயல்’ என்று கூறியவுடனே வாளை உறையிலிட்டு வணங்கி வழி விட்டனர். அவர்கள் தோற்றத்திலிருந்து களப்பிரர் ஆட்சி வந்த பின் பாண்டிய நாட்டில் மறைந்து வாழ்ந்த தென்னவன் ஆபத்துதவிகளின் வழிமுறையினராகவும், எதையும் எதிர்கொள்ள வல்ல முனையெதிர் மோகர்களின் வழிமுறையினராகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது.

நல்லடையாளம் கிடைத்ததும் அந்த வீரர்களில் ஒருவன் முன் வந்து அவனை அழைத்துச் சென்றான். எதிரே நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தன் விழுதுகளால் ஊன்றியிருந்த மாபெரும் குடையை ஒத்த ஆலமரம் ஒன்று தெரிந்தது. இவ்வளவு பெரிய ஆலமரத்தை மிகப் பெரிய திருக்கானப்பேர்க் காட்டில்கூட அவன் கண்டதில்லை. மறைகின்ற கதிரவனின் மஞ்சள் கலந்த செவ்வொளி இடையிடையே தெரியப் பெரும்பெரும் விழுதுகளை ஊன்றியிருந்த அந்த ஆலமரத்தின் அடிப்பாகம் எங்கிருக்கிறதென்று காணவே முடியவில்லை. ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தூண்கள் இறக்கியது போன்ற விழுதுகளைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்தார்கள். நெடுந் தொலைவு சென்றதும் ஒரு பெரிய கல்மண்டபம் போன்ற அதன் அடிமரம் தெரிந்தது. அந்த அடி மரத்தின் கீழ்ப்பகுதியில் மரப் பொந்துபோல் இயல்பாகவே ஒரு வாயிலும் தென்பட்டது. திருக்கானப்பேர்க்காட்டில் பல பழைய மருத மரங்களும், புளிய மரங்களும் இப்படிப் பெரிய பெரிய அடிப்பொந்துகளை உடையதாக இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் இந்த மரப் பொந்திலோ உள்ளே மிகப் பெரிய இடம் இருக்கும் என்று தோன்றியது. அடி மரத்தின் பிலம் போன்ற வாயைச் சுட்டிக்காட்டி உள்ளே போகலாம் என்பதுபோல் இளைய நம்பிக்குச் சைகை செய்து விட்டு வெளிப்புறமே ஒதுங்கி நின்றுகொண்டான் உடன் வந்த வீரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/22&oldid=714926" இலிருந்து மீள்விக்கப்பட்டது