பக்கம்:நித்திலவல்லி.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

நித்திலவல்லி / முதல் பாகம்


அப்புறம் வந்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் எல்லா ஓலைகளையும் அப்படியே இடைக்கச்சையில் மறைத்துக் கொண்டு பணிப் பெண்ணோடு அவள் அழைத்துச் சென்றபடியே மாளிகையின் முன் வாயிற்பகுதிக்கு விரைந்தான் அவன்.


39. மூன்று எதிரிகள்

இளையநம்பி தன்னை அழைத்துச் சென்ற பணிப் பெண்ணுடன் கணிகை மாளிகையின் முன் வாயிற் பக்கம் சென்றபோது ஏற்கெனவே அங்கே அழகன் பெருமாள் பதற்றத்தோடு, கைகளைப் பிசைந்த வாறு நின்று கொண்டிருந்தான். வெளிப்புறம் யாராலோ கதவுகள் பலமாகத் தட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இரத்தினமாலையும் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

“வெளிப்புறம் வந்து நின்று கதவைத் தட்டுவது யார்? நீ ஏன் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறாய்?"-என்று அழகன்பெருமாளை வினவினான் இளையநம்பி.

உடனே அழகன் பெருமாள் பிரம்மாண்டமான அந்த நிலைக் கதவில் இருந்த சிறிய துவாரம் ஒன்றைச் சுட்டிக் காண்பித்து. “நீங்களே பாருங்கள்; வந்திருப்பது யார் என்பது புரியும்” என்றான். கதவைத் திறப்பதற்கு முன் வெளியே வந்திருப்பவர்களைக் காண்பதற்காக ஓர் மானின் கண் அளவிற்கு அங்கே கதவில் துளை இருந்தது.

இளையநம்பி இரத்தினமாலையின் முகத்தைப் பார்த்தான்.

“நான் பார்த்தாயிற்று! நீங்கள் பார்த்தால்தான் உங்களால் நிலைமையின் அபாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்” -- என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/223&oldid=715389" இலிருந்து மீள்விக்கப்பட்டது