பக்கம்:நித்திலவல்லி.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

நித்திலவல்லி / முதல் பாகம்



தொடர்ந்து இங்கே தங்கியிருக்க முடியாது. வந்திருக்கும் மூவரைக் கொன்றுவிடுவதால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான பூதபயங்கரப்படை வீரர்கள் வந்து இந்த மாளிகையை முற்றுகையிட்டு வளைக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? அப்படியே கதவைத் திறப்பதற்குக் காலதாமதம் செய்து விட்டுத் தப்புவதானால், இரத்தினமாலை, அவள் பணிப் பெண்கள் நீங்கலாக நாமனைவரும் தப்பலாம். பூத பயங்கரப் படை வீரர்கள் மூவரையும் தந்திரமாக உள்ளே விட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களை அழித்த பின் தப்புவதானால், இரத்தினமாலையும், அவளைச் சேர்ந்தவர்களும் கூட நம்மோடு தப்பி வெளியேறத்தான் வேண்டியிருக்கும். பூதபயங்கரப் படைவீரர்கள் இந்த மாளிகை எல்லைக்குள் வைத்துக் கொல்லப்பட்ட பின்னர், இங்கே இரத்தினமாலை தங்கினாலும் அவளுக்கு அபாயம்தான். களப்பிரர்கள் இரத்தினமாலையை ஐயுறுவதற்கும், தொடர்ந்து சித்திரவதை செய்வதற்கும் அதுவே காரணமாகிவிடும். ஆகவே நாம் மட்டும் தப்புவதானால், எதிரிகள் மூவரும் உள்ளே வருவதற்கு முன்பே தப்பிவிடலாம். ஆனால் எதிரிகளை உள்ளே வரவழைத்து அழித்த பின் தப்புவதானால், வெறும் மாளிகையை மட்டுமே விடுவித்து எல்லாரும் தப்பிவிட வேண்டியதுதான் அழகன்பெருமாள்!” -என்றான் இளையநம்பி.

அழகன் பெருமாள் இதைக் கேட்டு எதற்கோ தயங்கிச் சிந்தித்தான்.

“இவர் சொல்லுவதுதான் முற்றிலும் பொருத்தமான முடிவு! வந்திருப்பவர்கள் இங்கே வைத்துக் கொல்லப்பட்டு விட்டபின், அதற்கு மேலும் களப்பிரர்களின் நம்பிக்கைக்கு உரியவளாக, இந்த நகரிலோ, இந்த மாளிகையிலோ, நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து ஒற்றறிவது என்பது சாத்தியமில்லை"-என்றாள் இரத்தினமாலை.

வெளிப்புறம் கதவைத் தட்டுவது இடையறாது தொடர்ந்தது. நல்ல வைரம் பாய்ந்த கருமரத்தினால் செதுக்கி இழைத்து உருவாக்கப்பட்ட அந்தப் பூதாகாரமான கதவுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/225&oldid=945240" இலிருந்து மீள்விக்கப்பட்டது