பக்கம்:நித்திலவல்லி.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

227

உள்ளே நுழைந்த விதம் அவளுக்கு வியப்பை அளித்தது. ‘உருவிய வாளுக்கும், பூதபயங்கரப் படையின் உடைக்கும் தகுந்த மிடுக்கோ, சினமோ, இன்றி உள்ளே வரும் அவர்கள், ஒருவேளை இந்தக் கணிகை மாளிகையில் ஆடல் காணலாம், பாடல் கேட்கலாம் என வருகிறார்களோ’ என்று சந்தேகப் பட்டாள் அவள். அவர்கள் மூவரும் நிலைப்படியைக் கடந்து இரண்டுபாக தூரம்கூட உள்ளே வந்திருக்க மாட்டார்கள். திறக்கப்பட்ட கதவுகளின் பின் மறைவிலிருந்து இளையநம்பி முதலிய நால்வரும் உருவிய வாளோடு அவர்கள் மேல் பாயவும், இரத்தினமாலைதான் திறந்த கதவுகளையே மீண்டும் அவசர அவசரமாக அடைக்க முற்பட்டாள்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. உள்ளே வந்த மூவரும் ‘கயல்’-என்று நல்லடையாளச் சொல்லைச் சற்றே உரத்த குரலில் கூறவும், உருவிய வாளுடன் பாய்ந்த நால்வரும் ஒன்றும் புரியாமல் தயங்கிப் பின்வாங்கினர்.

அடுத்த கணம் விரைந்து பூதபயங்கரப் படை வேடத்தைக் கலைத்துவிட்டுக் காரி, கழற்சிங்கன், சாத்தன் ஆகிய உபவனத்து நண்பர்கள் மூவரும் எதிரே நிற்பதைக் கண்டதும், அழகன்பெருமாள் முதலியவர்கள் வாளைக் கீழே எறிந்துவிட்டு ஓடிவந்து அவர்களைத் தழுவிக் கொண்டனர்.

“எங்களையே ஏமாற்றி வீட்டீர்களே? மெய்யாகவே பூதபயங்கரப் படையினர் மூவர் இங்கு சோதனைக்காகத் தேடி வந்திருக்கிறீர்களோ என்று அஞ்சி நாங்களே ஏமாறும் அளவு நடித்து விட்டீர்கள் நண்பர்களே!”-என்றான் இளையநம்பி.

“இவ்வளவு செம்மையாகவும் திறமையாகவும் நடிக்கா விட்டால் வெளியே நாங்கள் உயிர் பிழைத்துத் தப்பி வந்திருக்கவே முடியாது ஐயா!” என்றான் கழற்சிங்கன். எதிர்பாராத இந்தப் புதிய திருப்பத்தைக் கண்டதும், ‘காப்பாற்றப்பட வேண்டியவர்கள் தாங்கள் மட்டுமில்லை வந்திருப்பவர்களும் கூடத்தான்’-என்று புரிந்து கொண்டு, அடைத்த கதவையே நன்றாக அழுத்தித் தாழிட்டாள் இரத்தினமாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/228&oldid=715391" இலிருந்து மீள்விக்கப்பட்டது