பக்கம்:நித்திலவல்லி.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


40. மங்கலப் பொருள்


“நல்லடையாளச் சொல்லைக் கூற நாங்கள் ஒரு விநாடி காலந் தாழ்த்தியிருந்தால் எங்களைக் கொன்று நமனுலகுக்கு அனுப்பியிருப்பீர்கள் அல்லவா?” -என்று உள்ளே வந்ததும் கழற்சிங்கன் இளையநம்பியைக் கேட்டான்.

“இந்தப் பயம் உங்களுக்கு முன்பே இருந்திருந்தால் நீங்கள் பூதப்யங்கரப் படை வீரர்களைப் போன்ற மாறுவேடத்தில் இங்கு வந்திருக்கக்கூடாது”-என்று அதற்கு இளையநம்பியை முந்திக் கொண்டு இரத்தினமாலை மறுமொழி கூறினாள். அவர்களில், சாத்தன் அதற்கு விடை கூறினான்:-

“இந்த வேடத்தைத் தவிர, வேறு எந்த மாறு வேடத்தாலும் நாங்கள் உயிர் பிழைத்து இங்கே வந்து சேர்ந்திருக்க முடியாது.”

கோநகரிலேயே வேண்டிய நண்பர்கள் பலர் வீடுகளில் மறைந்து வாழ்ந்தது முதல், கடைசியாக இன்று கணிகை மாளிகை வந்து சேர்ந்தது வரை தாங்கள் பட்ட வேதனைகளை எல்லாம் காரி சொன்னான்.

“எப்படியோ ஆலவாய்ப்பெருமாள் அருளால் இங்கே வந்து சேர்ந்து விட்டீர்கள்! களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட நம்மவர்களான தென்னவன் மாறனையும், திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் விடுவிக்கும் பொறுப்பைப் பெரியவர் நம்மிடம் விட்டிருக்கிறார். இனி நாம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்” -என்றான் அழகன் பெருமாள். அப்போது அந்த மூவரும் தேனூர் மாந்திரீகனைப் பற்றி விசாரிக்கவே, அவன் காயமுற்று வந்து அங்கு படுத்திருக்கும் நிலைமையை அவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மூவரையும் அவன் இருந்த கட்டிலருகே அழைத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/229&oldid=715392" இலிருந்து மீள்விக்கப்பட்டது