பக்கம்:நித்திலவல்லி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

நித்திலவல்லி / முதல் பாகம்


விரைந்து துடிக்கும் நெஞ்சத்தோடு உள்ளே நுழைந்த இளைய நம்பி தன் கண்களின் எதிரே மெய்சிலிர்க்கும் காட்சியைக் கண்டான். வியப்பினால் அவன் கண்கள் இமையாமல் நேர் எதிரே பார்த்தன.

ஒரு காலைச் சாய்த்து மடக்கி மறு காலைக் கீழே தொங்கவிட்டபடி திடீரென்று உள்ளே நுழைகிறவர்களின் கண்களில் தென்திசைக் கடவுள் ஆலமரத்தடியில் யோகியாக அமர்ந்து தென்படுவதுபோல் தென்பட்டார் மதுராபதி வித்தகர். அந்தத் தட்சிணாமூர்த்தியின் அருள் கூட இனிமேல் பாண்டியர் பரம்பரையினருக்கு இந்தத் தட்சிணாமூர்த்தியின் உதவியால்தான் கிடைக்க வேண்டும் போலும் என்று அவனுக்குத் தோன்றியது. வெண்மையின் ஒளியும், கருமையின் கூர்மையும் தனித்தனியே தெளிவாகத் தெரியும் இரண்டு அற்புதமான கண்கள் அந்தப் பரந்த முக மண்டலத்திலிருந்து வெண்ணெயில் கரு நாவற்பழம் பதித்ததுபோல் அவனை நோக்கி விழித்தன. வெண்சாமரம் போன்று நன்றாக நரைத்து வெளுத்துவிட்ட சடைமுடிக்கற்றைகள் அவிழ்ந்து தோள்களிலும் பிடரியிலும் சரிந்திருந்தன. ஒரு கிழச் சிங்கம் அமர்ந்திருப்பதுபோல் அந்தப் பிடரிமயிரும் நேரே பார்க்கும் பார்வையும் அவன் கண்களுக்கு அவரைக் காட்டின. அந்த அரிமா நோக்கின் கூர்மை அவரிடம் பேசுவதற்கு என்று அவன் நினைத்த வார்த்தைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் குத்திக் கீழ் விழச்செய்தது. அங்கிருந்த அகல் விளக்கின் ஒளியில் அவர்கள் கையிலிருந்த வெள்ளெருக்கம் பிரம்பும் மிகப்பெரிய படைக் கருவிபோல் தோன்றி அவன் பார்வையை மருட்டியது. சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து அந்த மாபெரும் இராஜ தந்திரியை வணங்கினான் இளைய நம்பி. அவன் அறிமுக உறவு சொல்லிக்கொள்ளு முன் அவரே அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்.

அவருடைய கணீரென்ற குரல் அவனை வாழ்த்தியது. எழுந்து நின்றவன் என்னென்ன வார்த்தைகளையோ அவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/23&oldid=704166" இலிருந்து மீள்விக்கப்பட்டது