பக்கம்:நித்திலவல்லி.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

229



சென்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை படைக்கலங்களை மறுபடி மறைத்து வைக்கச் சென்றாள்.

இந்நிலையில் ஏற்கெனவே தான் அரைகுறையாகப் படித்துவிட்டு வைத்திருந்த செல்வப் பூங்கோதையின் ஓலையில் படிப்பதற்கு இன்னும் ஓர் ஓலை மீதியிருப்பதை நினைவு கூர்ந்தவனாகச் சந்தனம் அரைக்கும் <--- அரைக்கும் என்பதே சரி ---> பகுதிக்குத் திரும்பினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் குறிப்பறிந்து அவனைப் பின்தொடர்ந்தான். தான் படிக்காமல் எஞ்சியிருந்த அவளது மூன்றாவது ஓலையில் என்னென்ன அடங்கியிருக்குமோ என்ற ஆவல் ததும்பும் மனத்துடன் இடைக் கச்சையிலிருந்து அந்த ஓலையை எடுத்து மீண்டும் படிக்கத் தொடங்கினான் இளையநம்பி.

“ஏற்கனவே நான் எழுதி வைத்து விட்ட இந்த அன்புமடலை உங்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இவ்வூர்க் கொல்லன் இங்கு வந்தபோது மன்றாடி வேண்டிக் கொண்டேன். ‘திருமோகூரிலிருந்து வேறு எங்கோ மாறிச் சென்று விட்ட பெரியவர் மதுராபதி வித்தகரைக் காணச் செல்வதாகவும் மீண்டும் எப்போதாவது கோநகருக்குச் செல்ல நேர்ந்தால் என் ஓலையை உங்களிடம் சேர்ப்பதாகவும்’ - கொல்லனிடமிருந்து எனக்கு மறுமொழி கிடைத்தது. அப்போது நாங்கள் எந்த நிலையிலிருக்கிறோம்? ஊர் எந்த நிலையிலிருக்கிறது? களப்பிரர்களின் கொடுமைகள் எப்படி உள்ளன? என்பன பற்றி எல்லாம் இந்த ஓலையை உங்களிடம் சேர்க்கும்போதே கொல்லன் விரிவாகச் சொல்லக்கூடும். அவற்றை எல்லாம் நான் விவரித்து எழுத இயலவில்லை.

ஓர் அன்பு வேண்டுகோளுடன் அடியாள் இதை முடிக்க விரும்புகிறேன். இதை நான் கொடுத்தனுப்பி, இது உங்கள் கைக்குக் கிடைத்தால்-அப்படிக் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியை நானடைவதற்காக நீங்கள் எனக்கு மாற்றம் தந்து எழுதத்தான் வேண்டும் என்பதில்லை. எழுதினால் இப்பேதை எல்லையில்லாப் பெருமகிழ்ச்சியை அடைவேன் என்றாலும், நான் உங்களிடம் இப்போது வேண்டப் போவது வேறு. உங்களுக்கு இது கிடைத்து நீங்கள் இதைப் பார்த்து விட்டதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/230&oldid=945230" இலிருந்து மீள்விக்கப்பட்டது