பக்கம்:நித்திலவல்லி.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

231


பெரிய காராளர் மகளிடம் சேர்த்தாலே போதுமானது” - என்று அதைத் திருமோகூர்க் கொல்லனிடம் அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தான் இளையநம்பி. கொல்லனும் அதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டான். பெரியவருக்கு ஏதேனும் மறுமொழி ஓலை தரலாம் என்றால் அவர் எந்த மறுமொழி ஓலையையும் எதிர்பார்க்கவில்லை. நிலைமையை அறிந்து வருமாறு மட்டுமே தன்னைப் பணித்தார் என்பதாகக் கொல்லன் கூறிவிட்டான். மறுபடி நிலவறை வழியே அவன் புறப்பட்டுச் செல்ல அன்று நள்ளிரவு வரை அங்கேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. நள்ளிரவில் கொல்லன் புறப்பட்டுப் போனான். அவனை வழியனுப்பிவிட்டு அழகன்பெருமாள், இளையநம்பி முதலியவர்கள் உறங்கப் போகும்போது இரவு நடுயாமத்திற்கு மேல் ஆகிவிட்டது.

மறுநாள் அதிகாலையில் இளைய நம்பியைத் துயிலெழுப்ப அவன் கால்களினருகே மஞ்சத்தில் அமர்ந்து இரத்தினமாலை யாழ் வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த இனிய யாழொலி கேட்டு எழுந்த இளையநம்பி சிரித்துக் கொண்டே அவளை வினவினான்:

“இதென்ன புது வாத்திய உபசாரம்?”

“இப்படியெல்லாம் தங்களை நோகாமல் உறங்கச் செய்து நோகாமல் துயில் எழுப்பிப் பாதுகாக்கச் சொல்லிப் பெரியவரின் ஆணை”-என்றாள் அவள், அதற்கு மறுமொழி கூறாமல் ஏதோ நினைத்துக் கொண்டவனாக மேன் மாடத்திலிருந்து படிகளில் இறங்கி விரைந்து கீழே அழகன்பெருமாளைக் காணச் சென்றான் இளையநம்பி.

அங்கே அழகன் பெருமாள் படுத்திருந்த இடம், தேனூர் மாந்திரீகனின் கட்டில் எல்லாமே வெறுமையாயிருந்தன. வியப்போடும் சினத்தோடும் திரும்பினான் அவன்.

“அவர்கள் நால்வரும் அழகன் பெருமாளும் இப்போது இங்கு இல்லை!” என்று கூறியபடியே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இளையநம்பி அதைக் கேட்டுத் திகைப்படைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/232&oldid=715393" இலிருந்து மீள்விக்கப்பட்டது