பக்கம்:நித்திலவல்லி.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



இருந்தார்கள். அங்கு பேசப்படுகிற எதுவும் வெளியேறிப் பரவி விடக் கூடாது என்பதற்காக, மந்திராலோசனை மண்டபத்திலும், அதனைச் சார்ந்துள்ள இடங்களிலும் ஏவலாளர், காவல் இளைஞர், ஓவியச் சுற்றம், உட்படு கருமத்தார் ஆகியோரில் தமிழர் யாரும் இருந்து விடாதபடி தவிர்த்திருந்தனர் களப்பிரர். உட்படு கருமத்தார் தெரிந்து கூறிய செய்திகளிலிருந்து மன்னனும், அமைச்சரும் பதறிக் கலங்கிப் போயிருந்தனர். பல்லாண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்டு வரும் பாண்டிய நாடு தங்களிடமிருந்து கை நழுவிப் போய் விடுமோ என்ற பயமும், தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமே என்ற பயமும் என்றும் இல்லாதபடி இன்று அவர்களுக்கு வந்திருந்தன.

இழந்ததை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவன் வீரன். பெற்றதை மீண்டும் இழந்து விடுவோமோ என்று பயந்துகொண்டே இருப்பவன் கோழை. அவன் பெற்றதையும் இழப்பான்; வீரத்தையும் இழப்பான். பயம் அதிகமாக, அதிகமாகக் களப்பிரர்களிடம் வீரம் குன்றி முரட்டுத்தனமும், பாண்டியர்களுக்கு ஆதரவான குடிமக்களை அழித்து விட வேண்டும் என்ற வெறியுமே மிகுந்தன.

அன்று நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்துக்கு வரும் போது, கலிய மன்னனின் முகம் இருண்டிருந்தது. கண்களில் ஒளி இல்லை. உயரமும், பருமனும் உருவத்தை எடுத்துக் காட்டும் வளங்கெழு மீசையும், வசீகரமான மணிமுடியும் அவனது ஒளியிழந்த முகத்தோடு ஒட்டாதவை போலத் தோன்றின. மந்திராலோசனைக் கூட்டம் பாலிமொழியில் நடைபெற்றது. அமைச்சர்களும், உட்படு கருமத் தலைவர்களும், யானைப் படை, தேர்ப் படை, காலாட் படைத் தலைவர்களும், பூத பயங்கரப் படையின் தலைவனும், கலிய மன்னனின் அரச குருவும், ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

கலிய மன்னன் பொறுமையிழந்து போயிருந்தான். நிதானம் அறவே பறி போயிருந்தது. அவன் குரல் குரூரமாக ஒலிக்கத் தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/235&oldid=946348" இலிருந்து மீள்விக்கப்பட்டது