பக்கம்:நித்திலவல்லி.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

237



“இவ்வளவு காலத்துக்குப் பின் இந்நாட்டு அடிமைகளின் கூட்டத்திலிருந்து வீரர்கள் தோன்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள். பல காத தூரம் கடந்து வந்து கைப்பற்றிய பேரரசை யாரும் அசைக்க முடியாதபடி பிடித்து விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அசைத்துக் கொண்டிருப்பவர்களில் நால்வரையோ, ஐவரையோ சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோம் என்கிறீர்கள்! எதிரிகளை உயிரோடு பார்ப்பது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குப் பிணங்களாகக் காட்ட வேண்டியவர்களை நீங்கள் இன்னும் உயிருள்ளவர்களாகச் சிறை வைத்திருக்கிறீர்கள்! இல்லையா?” என்று கூறிக் கொண்டே தன் வலது கையை மடக்கி, இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் கலியன்.

அப்போது பூத பயங்கரப் படையின் தலைவன் எழுந்து மறுமொழி கூறலானான்:-

“வேந்தே! உயிர் அவர்கள் உடலிலிருந்து போய் விட்டால், சித்திரவதையை அவர்கள் உணரவும், அனுபவிக்கவும் முடியாமல் போய்விடும். சித்திரவதைகளை உணரவும், அனுபவிக்கவும் வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பிணங்களாக்கி விடாமல் இன்னும் நடைப் பிணங்களாகவே வைத்திருக்கிறோம்.”

“உன் வீரப் பிரதாபங்களால் நீ அவர்களை நடைப் பிணங்களாக வைத்திருப்பது பற்றித் தெரிவதை விட அவர்களிடமிருந்து நீ அறிந்த வேறு செய்திகள் என்ன என்ன என்பதைக் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று குறுக்கிட்டார் அது வரை அமைதியாக இருந்த அரச குரு.

“பொறுத்தருள வேண்டும் அரச குருவே! அவர்களிடமிருந்து எதையும் அறிய முடியவில்லை. சித்திரவதை செய்தும் பயன் இல்லை! அவர்களின் மன உறுதி வியக்கத் தக்கதாக இருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/236&oldid=946349" இலிருந்து மீள்விக்கப்பட்டது