பக்கம்:நித்திலவல்லி.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

241



“அடிகள் உணர்ந்தால் நானே உணர்ந்தது போல்தான்! பாண்டியர்கள் கலகம் செய்து ஆகப் போவது என்ன? நாம்தான் அந்தப் பழம் பெரும் அரச மரபை மறுபடியும் தலையெடுக்க முடியாதபடி பூண்டோடு அழித்து விட்டோமே? வம்சமே இல்லாமற் போய் விட்ட ஒரு குலம் மறுபடி வாகை சூட முடியுமா?”

“கலியா! பலமுறை நீ என்னிடம் இப்படியே கூறி வருகிறாய்! உன் நினைப்புத் தவறானது. மேலாகத் தெரியும் அடி மரத்தின் வாட்டத்தைக் கொண்டு கீழே வேர்கள் எல்லாமே வாடி விட்டன என்பதாக நீ அநுமானம் செய்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். பாண்டிய அரச ம்ரபுக்கு இன்னும் வேர்கள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”

“எதைக் கொண்டு தாங்கள் அப்படி நம்புகிறீர்கள்?”

“மிகப் பெரிய ஆலமரங்கள் எளிதாக அழிவதில்லை!”

“அழித்துப் பல ஆண்டுகள் கடந்து விட்டனவே?”

“விழுதுகளில் சிலவற்றை அழித்து விட்டு மூல விருட்சமே பட்டுப் போய் விட்டதாக நீ நினைக்கிறாய்?”

“மூலவிருட்சம் எங்கே இருக்கிறது?”

“எங்கே இருக்கிறது என்பதுதான் எனக்கும் தெரியவில்லை. ஆனால், இருக்கிறது என்பதை மட்டும் நம்புகிறேன். அந்த மூல விருட்சத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?”

“தெரியாது! அதையும் தாங்கள்தான் கூறியருள வேண்டும் அடிகளே!”

“வைகை வள நாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென்பாண்டிய மதுராபதி வித்தகன்! அவன் உயிரோடு இருக்கும் வரை பாண்டிய குலம் அழிந்திருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன்! பாண்டிய குலம் அழிந்திருந்தால், அந்தக் கிழச் சிங்கம் இதற்குள் வெளிப்பட்டு வந்து காவியுடை தரித்துத்

நி.வ - 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/240&oldid=946358" இலிருந்து மீள்விக்கப்பட்டது