பக்கம்:நித்திலவல்லி.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



துறவியாகி இருக்கும். அந்தக் கிழச் சிங்கம் இன்னும் மறைந்திருப்பதே பாண்டிய மரபின் வேர் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஊக்கமுடையவன் ஒடுங்கியிருப்பதும், மறைந்திருப்பதும் பயத்தினால் அல்ல. இயலாதவர்கள் ஒடுங்குவது கையாலாகாமை. இயன்றவர்கள் ஒடுங்குவது தங்களை மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே.”

“இருக்கட்டும்! ஆனால் ஒரு துறவி தனியாகத் தான் மட்டுமே முயன்று அழிந்து போன பேரரசு ஒன்றை மீண்டும் எப்படி உருவாக்க முடியும்?”

“துறவியா? யார் துறவி? நான் உயிரோடு இருக்கிற வரை அந்த மதுராபதி துறவியாக இருக்க முடியாது. அவன் உயிரோடு இருக்கிற வரை நானும் முழுத் துறவியாக இருக்க முடியாது. துறவிகள் விருப்பு வெறுப்பற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அவன் உயிரோடு இருக்கிற வரை எனக்கும் நான் உயிரோடு இருக்கிற வரை அவனுக்கும் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் நிறைய விஷயங்கள் உண்டு...”

“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை அடிகளே!”

“புரிவது சற்றே சிரமமானதுதான். களப்பிரர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையிலுள்ள இந்தப் பழம் பகையில், இரண்டு அறிவு வீரர்களின் தனிப் பகையும், குரோதமும், பொறாமையும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. காலம் வரும் போது அது உனக்குத் தெரியும். இந்த இரண்டு அறிவாளிகள் ஒருவரை மற்றொருவர் எப்படிப் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த மற்றொரு பகையின் முடிவும் இருக்கும்.”

இதைக் கூறும் போது மாவலி முத்தரையரின் அந்தக் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்துவிட்டன. அவருடைய சரீரமே தீப்பற்றி எரிவது போல் கனன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/241&oldid=946355" இலிருந்து மீள்விக்கப்பட்டது