பக்கம்:நித்திலவல்லி.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“நீங்களே அவனைப் பழி வாங்கவும் துடிக்கிறீர்கள்! வியந்து போற்றவும் செய்கிறீர்கள்! மதுராபதி வித்தகனைப் புரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும். இப்போது உங்களையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அடிகளே!”

“நான் அவனைப் பழி வாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவனுடைய அறிவுதான். அதை நான் குறைவாக மதிப்பிட்டிருந்தால், இந்தப் பழி வாங்கும் எண்ணமும், குரோதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. அறிவின் எல்லையைத் தொட்டு விட்டவனைப் பார்த்து, அதில் பின் தங்கி விட்டவனுக்கு ஏற்படுகின்ற கோபம்தான் இது.”

“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை அடிகளே!”

“அறிவால் போரிட்டுக் கொண்டிருப்பவர்களின் பகையை, ஆயுதங்களால் போரிடுகிறவர்கள் புரிந்து கொள்வது கடினம்தான்.”

“நிதானமாகவும், காரண காரியங்களோடும் நடை பெறுகிற எந்தப் போரையும் அரசர்கள் விரும்ப முடியாது. ஒரு போரில் எதிர்ப்பவர், எதிர்க்கப்படுகிறவர் இருவரில் யாராவது ஒருவர் அழிந்தாக வேண்டும். இருவருமே நீடிக்கிற போர் எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.”

“அப்படியானால் நீயும், உன்னைப் போன்றவர்களும் என்னையொத்த அறிவாளியின் குரோதத்தையோ, பகையையோ புரிந்து கொள்வது மிகவும் சிரமமானது.”

“எதிரியின் உடலை அழிப்பதால், நாம் வென்று விடுவதுதான் வெற்றி. அதுவே போரின் இலட்சியத்தை முடிவு செய்து விடுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.”

“அறிவாளிகளின் போரில் உடல் அழிக்கப்படுவதோ, அங்கங்கள் சிதைக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவதோ வெற்றியை நிர்ணயிப்பதில்லை கலியா! வாதம் பலவீனப் படும் போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/245&oldid=946360" இலிருந்து மீள்விக்கப்பட்டது