பக்கம்:நித்திலவல்லி.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


தனக்கு இணையற்ற அழகுச் செருக்கும், உடல் வளமும் உள்ள ஒரு யுவதி கம்பீரமான ஆடவன் ஒருவனால் அலட்சியப் படுத்தப்பட்ட ஆற்றாமைக் கோபத்தில் எப்படிச் சீறுவாளோ, அப்படிச் சீறினாள் அவள். அப்போது அவன் தன்னைக் கையைப் பிடித்து இழுத்து அறைந்திருந்தால் கூட அவளுக்குக் கோபம் வந்திருக்காது; கோபமே, அந்த விநாடி வரை அவன் அப்படித் தன்னைக் கையைப் பிடித்து இழுத்தும் கூட அறைய முற்படவில்லையே என்பதனால் தான் 'ஏ முரட்டு ஆண் மகனே! தயவு செய்து என்னைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள மாட்டாயா? என்னை ஏன் இப்படி அலட்சியம் செய்கிறாய்? நீ அடக்கி ஆளக் கூட நான் தகுதியற்றவளா?’ என்று இறைஞ்சி இரப்பது போல் ஒரு கணமும், உடனே மாறிய மன நிலையில் அடியுண்ட நாகம் சீறுவது போல் மறு கணமும் மாறி மாறிப் பார்க்கும் பார்வைகளை உடையவளாகத் தவித்தாள் அவள்.

‘நீர் என்னை ஒரு பேதைப் பெண்ணாக ஒப்புக் கொண்டு உம்முடைய கைகளால் வதை செய்தால் கூட நான் உம் அடிமையாகி விடுவேன்’ என்பது அவள் தாபமாக அவன் எதிரே நின்றது. அந்தத் தாபத்தை அவன் அங்கீகரிக்கவில்லை என்பதே அவள் சீற்றமாக இருந்தது. அவன் அலட்சியமாக அவளை நோக்கிக் கூறலானான்:

“எனக்குத் தெரியும் பெண்ணே! பேயின் முகத்தைப் போல் கொடிய முகத்தை உடைய உங்கள் அரச குரு மாவலி முத்தரையரின் ஏற்பாடாகத்தான் இருக்கும் இது. ஆணைப் பெண்ணால் மயக்கி வசப்படுத்த வேண்டும். பெண்ணை, ஆணால் மயக்கி வசப்படுத்த வேண்டும் என்ற வெளிப்படையான அளவுகளை வைத்து யாவற்றையும் திட்டமிடுகிறார் அவர்.”

“அவ்வளவுக்கு அவர் சிறுபிள்ளைத்தனமான அரச தந்திரி இல்லை ஐயா வாலிப வீரரே! பெண்களால் வசப்படுத்தி, மயக்க முடியாத ஆண்களும், ஆண்களால் வசப்படுத்தி, மயக்க முடியாத பெண்களும் அபூர்வமாக இந்த உலகில் இருப்பார்கள் என்பது மாவலி முத்தரையருக்கும் தெரிந்திருக்கும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/255&oldid=946372" இலிருந்து மீள்விக்கப்பட்டது