பக்கம்:நித்திலவல்லி.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

257



“தெரிந்தால் இப்படி நடந்திருக்காது.”

“எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதைச் சிறைப் பட்டிருப்பவர்கள் முடிவு செய்ய வாய்ப்பில்லை; பாவம்.”

“பாவம் என்று நீ என்னிடம் பரிதாபம் காட்ட வேண்டியதில்லை பெண்ணே! பாண்டிய நாட்டு வீரர்கள், பெண்களின் பரிவில் உயிர் வாழ விரும்புவதில்லை! அவர்கள் மன உறுதி படைத்தவர்கள்.”

“உண்மைதான்! கல் மனம் படைத்தவர்களுக்கு யாருடைய பரிவும் தேவைப்படாது.”

இதைச் சொல்லும் போதும் அவள் குரலில் அளவற்ற தாபமும், தாகமும், தவிப்புமே ஒலித்தன.

அடுத்த கணம் அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று இருந்தாற் போலிருந்து அவள் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். தென்னவன் மாறன் எதிர்பார்க்கவில்லை. பெண்ணிடம் இரண்டு விதமான படைக்கலங்கள் இருக்கின்றன. ஒன்று புன்னகை, மற்றொன்று கண்ணீர். ஓர் அழகிய பெண் இந்த இரண்டு படைக்கலங்களாலும் வெற்றி அடைய முடியும். ஒன்றினால் தவறி விட்டால், மற்றொன்றினால் உறுதியாக வெற்றி கிடைக்கும். தென்னவன் மாறன் அவளுடைய புன்னகை என்ற படைக்கலனால் தாக்கப்பட்ட போது உறுதியாக இருந்து, எதிர்த்து அவளைத் தோற்கச் செய்திருந்தான். முதல் தோல்வியைப் புரிந்து கொண்டு இப்போது இந்த இரண்டாவது வகைப் போரைத் தொடங்கியிருந்தாள் அவள்.'சில சமயம் புன்னகைகளால் வெல்ல முடியாத கல் மனம் படைத்தவர்களைப் பெண்கள் கண்ணீரினால் வென்று விடுவார்கள்’ - என்று பலமுறை கேள்விப் பட்டிருந்ததை நினைத்துத் தன் விஷயத்திலும், இப்போது அப்படி நடந்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் அவன்.

அரச தந்திரக் காரியங்களைச் சாம, தான, பேத, தண்ட முறைகளால் சாதித்துக் கொள்வது எல்லா அரசமரபிலும் வழக்கம்தான். சேர, சோழ, பாண்டிய மரபிலோ, தென்

நி.வ-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/256&oldid=946373" இலிருந்து மீள்விக்கப்பட்டது