பக்கம்:நித்திலவல்லி.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

263


பொல்லாததையும் புனைந்து கூறி, அரசனிடம் பரிசில் பெற்றுக் கொண்டு போவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அலைவதால், மாவலி முத்தரையருக்கு இவர்கள் மேல் என்றைக்கும் மதிப்பு எதுவும் இல்லை. இன்றும் அப்படியே நடந்தது. முதல் புலவரே சிங்காரச் சுவை நிறைந்த கற்பனை ஒன்றைப் புனைந்து பாடினார்.

‘கலிய மன்னனே! அழகிய பெண்கள் ஆகிய நாங்கள் உன்னை நினைத்து உருகிக் கருத்தைப் பறிகொடுத்துக் கைவளைகள் சோர்ந்ததால், நான்மாடக் கூடல் நகரத் தெருக்களின் இரு சிறகிலும் குவியல் குவியலாகப் பொன் வளைகள் கேட்பாரற்றுக் குவிந்து விட்டன. வளையிழந்து கை சோர்ந்த பெண்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்” என்று அர்த்தம் வருமாறு பாடினார் அவர்:-

“தெருமருங்கின் இருசிறகும் பொன்னினொளிர்
தொடிநிறைந்து குவிந்திருந்த நான்மாடத்
தருமருந்திற் கூடல்நகர் ஆரணங்கார்
அய்யா கலியழகா அறிவாழித்
திருவுருவே திண்தோளாய் வலிமிக்காய்!
திண்டிநினைக் கூடுமின்பம் வலிமிக்காய்!
வருநாளாய் நீதருநாளாய்த் திருநாளாய்
வளையிழந்து தெருவெல்லாம் அலைகின்றோம்”

மேற்கண்ட பொருளமைந்த பாலி மொழிக் கவிதையை முதற் புலவர் பாடி முடித்ததும் மாவலி முத்தரையர் அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார். அவருடைய ஏளனம், இயல்பை மீறி இருப்பதை அரசன் கவனித்தான்.

“ஐயோ, பாவம் அவ்வளவு பெண்களையும் இங்கே அழைத்து வந்து, நம் கலிய மன்னனைக் காண்பித்து விட்டுத் தெருக்களில் தேர்களும், யானைகளும், குதிரைகளும் போவதற்கு இடமில்லாதபடி வளைகள் குவிந்து விடாதவாறு தடுத்திருக்கலாமே!” என்று முத்தரையர் ஏளனம் செய்ததற்கு, ஒரு புலவர் மறுமொழி கூறலானார்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/262&oldid=946381" இலிருந்து மீள்விக்கப்பட்டது