பக்கம்:நித்திலவல்லி.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


களுக்கு மனம் அறிந்தே ஒரு பெரும் கெடுதலைச் செய்து விட்டுச் சென்றாள். இந்தக் கெடுதலை அவள் செய்ததற்குக் காரணம், அவள் மனத்திலிருந்த ஒரு பெரும் சந்தேகம்தான்.

“ஐயா! சுந்தர வாலிபரே! தயை கூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறி விடுவது நல்லது. இல்லாவிட்டால் நாளைக்குச் சூரியோதயத்திற்குள், உங்களைச் சிரச்சேதம் செய்து விடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் சிரச்சேதம் செய்யப்படுவதற்குள் உங்களிடமிருந்து என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ, அவற்றை எல்லாம் அறிவதற்கே நான் வந்தேன்” என்று தனியறையில் உணர்ச்சி வசப்பட்டு எதிரியிடம் தான் கூறியவற்றை எல்லாம், தனக்கே தெரியாமல் வெளியில் மறைந்திருந்து, காத்துக் கொண்டிருந்த பூதப் பயங்கரப் படைத் தலைவன் கேட்டிருந்து, அப்படியே அவற்றை எல்லாம் அரச குருவிடமோ அரசனிடமோ போய்ச் சொன்னால், தன் நிலைமை என்ன ஆகும் என்றெண்ணியே இப்போது காம மஞ்சரி அஞ்சினாள். இந்த அச்சமும், சந்தேகமுமே அவளை விரக்தியுடையவளாக்கியிருந்தன. அவள் தனியறையிலிருந்து வெளியேறும் முன்பே, முற்றிலும் எதிர்பாராத விதமாகப் பூத பயங்கரப் படைத் தலைவன் உள்ளே நுழைந்ததனால்தான் அவளுக்கே இந்தப் பயம் வந்திருந்தது. தன்னை அவர்கள் முழுவதும் நம்பியிருக்கவில்லை என்ற எண்ணமும் அவளை அச்சுறுத்தியது. புலித்தோல் அங்கி இளைஞனை ஒற்றறியத் தன்னை அனுப்பி விட்டுத் தன்னை ஒற்றறியப் பூத பயங்கரப் படைத் தலைவனை அனுப்பியிருந்தார்களோ என்ற சந்தேகமும் அவளுள் கிளர்ந்தது. 'தான் அபாயத்துக்கு ஆளாகி விட்டோம்’ என்ற பதற்றத்தில் அவள் முழு விரக்தி அடைந்தாள். அந்தப்புர உரிமை மகளிர் பகுதிக்கு, நடைப்பிணமாக அவள் திரும்பிக் கொண்டிருந்த போதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

அவள் வழியில், எதிரே அந்தப்புரத்திற்கும் சிறைக் கோட்டங்கள் இருந்த பகுதிக்கும், வழிகள் பிரியும் முனையிலே பூத பயங்கரப் படை வீரர்கள் அறுவர் நின்று கொண்டிருந்தனர். எதற்கோ தயங்கி நின்ற அவர்கள் அறுவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/267&oldid=946386" இலிருந்து மீள்விக்கப்பட்டது