பக்கம்:நித்திலவல்லி.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கோபம் முழுமையும் அவள் மேல்தான் திரும்பியது. அந்தக் கோபத்திற்கு உரிய இலக்கு அவள் இல்லை என்றாலும், எதிரே நின்ற காரணத்தினால் அவளே அதற்கு ஆளானாள்.

“சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவதும், சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுகிறவர்களுக்கு உதவுவதும்தான் கோநகரத்து நாகரிகம் என்று நான் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது!”

“உங்கள் கோபம் வீணானது? நாகரிகமே இல்லாத ஒரு கூட்டம் பாண்டி நாட்டை ஆண்டும் அடிமைப்படுத்தியும் வருகின்றது. அநாகரிகமானவர்களை நாகரிகங்களைக் கொண்டு மட்டுமே வென்று துரத்திவிட முடியாது. வன்மையானவர்களை மென்மையான முறைகளால் அணுகி மட்டுமே வென்று விட வழியில்லை. “

“நான் களப்பிரர்களைப் பற்றி உன்னிடம் கேட்கவில்லை இரத்தினமாலை! அழகன் பெருமாள் ஏன் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்து போக வேண்டும்? அதைத்தான் கேட்கிறேன்?”

“அவர்கள் எதை நிறைவேற்றும் குறிக்கோளுடன் போகிறார்களோ, அதில் உங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர் அவர்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.”

“சிறைப்பட்டு விட்ட தென்னவன் மாறனை மீட்கும் காரியத்தில் நான் ஈடுபடக் கூடாது என்றுதான் பெரியவர் கட்டளை இட்டிருக்கிறாரே தவிர, அதற்காகப் புறப்பட்டுப் போகிறவர்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போக வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பதாக எனக்கு நினைவில்லையே?”

“நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். யாமக் கோழி கூவுவதற்கு முன்பே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். உங்கள் உறக்கத்தை அவர்கள் கலைக்க விரும்பவில்லை. தவிரவும் உங்களை எழுப்பிச் சொல்லிக் கொண்டு புறப்ப்ட நேர்ந்து, நீங்களும் உடன் வருவேனென்று வற்புறுத்துவீர்களோ எனவும் அவர்கள் தயங்கியிருக்கலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/275&oldid=946395" இலிருந்து மீள்விக்கப்பட்டது