பக்கம்:நித்திலவல்லி.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

279


துயிலெழுப்புவது போல் தன்னை மங்கலம் பாடித் துயிலெழுப்பிய அவள் மேல் தான் சினம் கொண்டது தவறு என்பதை அவனே மெல்ல மெல்ல உணர்ந்தான்.

அவனை உண்பதற்கு அழைத்த போதும், பணிப் பெண்களே வந்து அழைத்தனர். அவள் அவன் முன் தென்படுவதே குறைவாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் வெளியேறி விட்ட பின் அந்த மாளிகையின் எல்லையிலேயே அவன் மனம் விட்டுப் பேசவும், பழகவும் அவள் ஒருத்திதான் இருந்தாள். அவளும் அவன் மேல் பிணக்குக் கொண்டு ஒதுங்கினாற் போல் இருக்கவே, அவன் நரக வேதனைக்கு ஆளானான். அந்த மாளிகையின் சுவர் ஓவியங்களைப் பார்ப்பதில், சிறிது நேரம் கழிந்தது. இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கருவிக் கூடத்தைக் காண்பதில் சிறிது நேரம் கழிக்க முடிந்தது. அங்கிருந்த இன்ச, நாடக, நடன நூற் சுவடிகள் அடங்கிய பகுதியில் சற்றே நேரம் போக்க முடிந்தது. நண்பகல் வரை அவளை, அவனும் தனிமைப்படுமாறு வாட்டினான். அவனை, அவளும் தனிமைப் படுமாறு வாட்டினாள். ஊடல்[1] நீடித்தது. அவளுடைய ஊடலை வழிக்குக் கொண்டு வர அவன் ஒரு தந்திரம் செய்தான். பெண்ணின் பலவீனமான எல்லை எது என்பதையும் புரிந்து கொண்டு, அந்தத் தந்திரத்தை அவன் செய்தான். தவறு தன்னுடையதுதான் என்று புரிந்தாலும், அவளிடம் தானாக முதலில் பேசுவதற்கு அவன் மனம் இறங்கி வரவோ, விட்டுக் கொடுக்கவோ விரும்பவும் இல்லை. எனவே அவளை வழிக்குக் கொண்டுவர, அவன் இந்தத் தந்திரத்தில் ஈடுபட்டான்.

இரத்தினமாலையின் பணி மகளும் அடித் தோழியும் ஆகிய பூங்குழல் நாச்சியார் என்பவளைக் கூப்பிட்டு, “நாச்சியார்! உன்னுடைய மென்விரல்களால் நீ யாழ் வாசிப்பதை நான் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன். என் விருப்பத்தை நீ உடனே நிறைவேற்றுவாய் என்று நான் நம்புகிறேன்”


  1. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நேரும் நளினமான பிணக்கு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/278&oldid=946399" இலிருந்து மீள்விக்கப்பட்டது