பக்கம்:நித்திலவல்லி.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

281


இரத்தினமாலை. ஆத்திரத்தில், தான் அவனிடம் நேரே பேசக் கூடாது என்ற பிணக்கு அவளுக்கே மறந்து விட்டது.

“அப்படி வா வழிக்கு! உன்னை என்னோடு நேரே பேச வைக்கத்தான் இத்தனை நாடகமும் ஆட வேண்டியிருந்தது: எங்கே? இப்போது நீயே யாழ் வாசிக்கலாம்..”

“நான் உங்களோடு பேச விரும்பவில்லை.”

“பெண்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ, அதை விரும்பவில்லை என்றுதான் சொல்வது வழக்கம்.”

இதைக் கேட்டு இரத்தினமாலை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள். அதுதான் பொருத்தமான நேரம் என்று இருவருக்கும் நல்லவளாக விரும்பிய தோழிப் பெண் நாச்சியார், அங்கிருந்து ஓடிப் போய் யாழை எடுத்துக் கொண்டு வந்து தலைவியிடம் கொடுத்து, ‘வாசியுங்கள் அம்மா பாவம்! கேட்க ஆசைப்படுகிறார்’ என்று அவனுக்காகப் பரிந்து உரைக்கலானாள்.

“அடி பேதைப் பெண்ணே! ஆண்களைச் சுலபமாக நம்பி விடாதே! அவர்களால் எதையும் சாதித்துக் கொள்ள, நடிக்கவும் முடியும். என்னையே எடுத்துக் கொள்! இப்போது நான் மிக எளிதில் ஏமாந்து போய்விட்டேன். ஒரு விநாடி பலவீனத்தில் என் ஊடல் எங்கேயோ போய் விட்டதே? ஆண் குலத்தை இப்படித் தொடர்ந்து வெற்றியடைய விட்டுக் கொண்டே இருப்பதால்தான் நாம் இன்னும் பேதைப் பெண்களாகவே இருக்கிறோம் நாச்சியார்...” என்று கூறியபடியே யாழுக்குச் சுருதி கூட்டலானாள் இரத்தின மாலை.

“உடனே, நன்றாகச் சுருதி சேருகிறதே" என்று குறும்பாகக் கூறினான் இளையநம்பி. அவள் ஊடல் தவிர்த்து மனம் தன்னோடு இணையத் தொடங்கியதையும், அந்த வாக்கியத்தின் மூலமே இரட்டுற மொழிதலாக அவளுக்குப் புலப்படுத்தி விட்டான் அவன். அவள் யாழ் வாசிக்க இணங்கியதன் மூலம், இளையநம்பியின் மேற் கொண்டிருந்த ஊடல் தவிர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/280&oldid=946401" இலிருந்து மீள்விக்கப்பட்டது