பக்கம்:நித்திலவல்லி.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


தெரிந்திருந்தும் முறைப்படி நல்லடையாளச் சொற்களைப் பரிமாறிக் கொண்ட பின், அவர்கள் அவனை மலைப் புதரில் வழி விலக்கி அழைத்துச் சென்றனர். அவன் முதலில் சந்தேகப்பட்டது நடந்திருந்தது. பெரியவர் முதலில் தங்கியிருந்த இடத்திலிருந்து வேறோர் இடம் மாறியிருக்க வேண்டும் என்பது அவர்கள் அழைத்துச் சென்ற பாதை மாறுபடுவதிலிருந்தே அவனுக்குப் புரிந்தது. அடர்ந்த புதர்களின் நடுவே நெடுந் தொலைவு நடக்க வேண்டியிருந்தது. நடந்து போகும் போதே, பெரியவரிடம் எதை, எதைச் சொல்ல வேண்டும், எப்படி, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை ஒரு முறைக்கு இரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டான் கொல்லன். “நீ திரும்பி வரும்போது நிலைமைகள் எப்படி இருக்குமோ, தெரியாது. ஆனால் நிலைமைகளை அறிந்து வந்து சொன்னால் மட்டும் போதும்; இளையநம்பியிடமிருந்தோ அழகன் பெருமாளிடமிருந்தோ, இரத்தினமாலையிடமிருந்தோ மறுமொழி ஓலை என்று எதுவும் வாங்கிக் கொண்டு வராதே! நீ அகப்பட நேர்ந்தால், அந்த ஒலைகளும் சேர்ந்து எதிரிகளிடம் அகப்பட நேர்ந்து, பல இரகசியங்கள் எதிரிகளுக்குப் புரிந்து விடும். அதனால் நீ திரும்பும் போது தெரிந்து கொள்ள வேண்டியவற்றை மட்டும் தெரிந்து வந்து சொல்! போதும்”, என்று பெரியவரே கட்டளை இட்டிருந்ததனால், தான் தெரிந்து வந்தவற்றை அவரிடம் கூற வேண்டிய முறைப்படி மனத்தில் வரிசைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினான் கொல்லன்.

குடை போல் கவிந்திருந்த ஒரு குருந்த மரத்தடியில் நெற்றி நிறையப் பளீரென்று திருநீறு துலங்கத் தியானத்தில் அமர்ந்திருந்தார் பெரியவர். காலைக் கதிர் ஒளியில் அவருடைய மேனி உருகும் செம்பொன் சாயலைப் பரப்பிக் கொண்டிருந்தது. அருகே கமண்டலமும், சில சுவடிகளும், ஒரு மண் பாண்டத்தில் சில கனிகளும் தென்பட்டன. அவர் தியானம் கலைகிறவரை அவன் காத்திருந்தான். அவருடைய கண்கள் திறந்ததுமே, அவன்தான் முதலில் பார்க்கப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/283&oldid=946405" இலிருந்து மீள்விக்கப்பட்டது