பக்கம்:நித்திலவல்லி.pdf/284

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

285



“போன காரியம்... ?”

“யாவும் முடிந்தன ஐயா!”

“திருக்கானப்பேர் நம்பி...?”

“இரத்தினமாலையின் பொறுப்பில் கோநகரில் பாதுகாப்பாக இருக்கிறார் ஐயா!”

இதைக் கேட்ட போது மட்டும் அவருடைய கண்களில் சிரிப்பின் மெல்லிய சாயல் படர்ந்து மறைவது போல், கொல்லனுக்குத் தோன்றியது. சில விநாடிகள் ஏதோ சிந்திப்பது போல் இருந்த பின் மீண்டும் அவர் அவனைக் கேட்டார்;

“தென்னவன் மாறனையும் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களையும் மீட்க என்ன ஏற்பாடு?”

“அழகன் பெருமாளும், உப வனத்து நண்பர்களும் அதை உடனே செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் ஐயா!”

“நல்லது! இந்தப் புதிய இடம் பற்றி நீ யாருக்கும் கூறவில்லையே?”

“கூறவில்லை ஐயா!”

“திருமோகூர் நிலைமை?”

“காராளர் மேல் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பு இருக்கிறது! வேறு அபாயம் இல்லை. காராளர் மேலுள்ள ஐயப்பாட்டாலும், தாங்கள் திருமோகூர் சுற்றுப்புறத்தில் எங்காவது தங்கியிருக்கக் கூடும் என்ற அநுமானத்திலும், அங்கே தண்டு இறங்கிய களப்பிரப் படையினர் இன்னும் புறப்படவில்லை! சில நாளில் ஒரு வேளை அவர்கள் சந்தேகம் நீங்கிப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடலாம்...”

“சில நாளில் அப்படி நடக்கலாம் என்பது உன் அநுமானம்தானே? இன்றோ, நாளையோ அந்தப் படைகள் திரும்ப வழியுண்டா?”

“இல்லை...”

“அப்படியானால் நீ இப்போதே விரைந்து திருமோகூர் திரும்பி, அங்கே எனக்காக உடனே செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/284&oldid=946406" இலிருந்து மீள்விக்கப்பட்டது