பக்கம்:நித்திலவல்லி.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


வரும்”, என்றான். அவன் இப்படிக் கூறிய போது அவள் அந்தத் தாழம்பூச் சுருளையும், சந்தனத்தையும் கண்களில் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளில் புதிய ஒளியை இப்போது அவன் கண்டான்.

“துன்பப்பட்டுத் தவிப்பவர்களின் வேதனைகள் தெய்வத்துக்கு எங்கே உடனே புரிகிறது? அந்தத் தெய்வம் அருளுகிற வரை நாம்தான் காத்துக் கொண்டிருந்து துயரப்பட வேண்டியிருக்கிறது. அன்பரைக் காக்க வைக்காத நல்ல தெய்வமே இந்த உலகம் எங்கும் இல்லை போலிருக்கிறது!”, என்றாள் அவள். இந்தச் சமயத்தில் காராளரின் மனைவி ஏதோ வேலையாக உட்பக்கம் சென்றாள். தாய் உள்ளே சென்றதும், செல்வப் பூங்கோதையின் கண்களில் நீர் நெகிழ்ந்து ஈரம் பளபளத்தது. 'அவரைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்லேன்-இன்னும் ஏதாவது சொல்லேன்', என்று அவனை இறைஞ்சியது அந்தப் பேதையின் துயரப் பார்வை.

“கவலைப்படாதீர்கள் அம்மா! நீங்கள் அனுப்பிய ஒலையைப் படித்து, அந்தத் திருக்கானப்பேர் நம்பி மிகவும் மனம் உருகி உணர்வுகள் நெகிழ்ந்ததை, நான் நேருக்கு நேர் என்னுடைய இரண்டு கண்களாலும் கண்டேன். இங்கே நீங்களும் அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே, உங்கள் இருவருக்கும் நல்ல காலம் விடியும் அம்மா!", என்று அவளுக்கு ஆறுதலாக மேலும் சொன்னான் அவன். திருக்கானப்பேர் நம்பி அந்த ஒலையைக் கணிகை மாளிகையின் சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து படித்து மகிழ்ந்ததை ஒரு சிறிது மிகைப்படுத்தியே 'உருகினார்', 'நெகிழ்ந்தார்' என்றெல்லாம் இங்கே செல்வப் பூங்கோதையிடம் அவன் சொல்ல வேண்டியிருந்தது. காரணம், ‘துன்பப்பட்டுத் தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் சொற்கள் பொய்யாக இருப்பினும், அத்தகைய பொய்களை வேண்டிய மட்டும் கூறலாம்’ - என்று அவன் மனதில் ஒரு நாட்டுப்புற நியாயம் இருந்தது[1].


  1. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/289&oldid=946449" இலிருந்து மீள்விக்கப்பட்டது