பக்கம்:நித்திலவல்லி.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நித்திலவல்லி / முதல் பாகம்


உண்டு முடித்ததும் பலகை போலிருந்த அந்தக் கல்லில் படுத்தபோதுதான் சற்றுமுன் அவர் அமர்ந்திருந்த கல்லை ஒட்டி ஒரு பெரிய புற்று இருப்பதை அவன் காண நேர்ந்தது. எப்போதென்று தெரியாத ஏதோ ஒரு நேரத்தில் அவன் தன்னையறியாமலே அயர்ந்து உறங்கிவிட்டான். அவனுடைய சொப்பனத்தில் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போடும் அந்தப் பேரழகியான திருமோகூர்ப் பெண் வந்தாள். கலப்பைக்குக் கொழு அடிக்கும் அசுர ஆகிருதியோடு கூடிய அந்தக் கரும்பொற்கொல்லன் வந்தான். இன்னும் யார் யாரோ வந்தார்கள்.

குளிர்ந்த காற்றும் வைகறையை வரவேற்கும் பறவைகளின் பல்வேறு ஒலிகளும் அவனை எழுப்பின. எழுந்து உட்கார்ந்து எதிரே பார்த்தவன் குருதி உறைந்து போகும் படியானதொரு காட்சியைக் கண்டான். அவனுக்குப் பேச நா எழவில்லை. உடல் புல்லரித்தது. அந்தப் பெரிய விழிகள் எப்போதும் போல் அவனை இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன.


3. காராளர் விட்டு விருந்து

“ஐயா!. இது என்ன கோரம்?” என்று கேட்க நினைத்து நா எழாமல் அவன் மருண்டிருப்பதைப் பார்த்துத் தம்முடைய வெண்பற்கள் தெரியச் சிரித்தார் அவர். அந்த அகன்ற நெற்றியில் உணர்ச்சிகளைப் படிக்கமுடியாமல் திகைத்தான் அவன்.

“நீ பயப்படுவாய் என்று எனக்குத் தெரியும்! தங்கத்தைப் புடம் போடுவதுபோல் இந்த உடலைப் புடம் போட்டு எடுத்திருக்கிறேன். எனக்கு எதுவும் கெடுதல் வரமுடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/29&oldid=715028" இலிருந்து மீள்விக்கப்பட்டது