பக்கம்:நித்திலவல்லி.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

293


சிரித்தான் அவன். வினாவின் பிற்பகுதிக்கு அவனிடமிருந்து தனக்கு மறுமொழி கிடைக்காது என்பதை, அவனது அந்தச் சிரிப்பு மூலமே அவள் அறிய முடிந்தது. ‘எந்தப் பெண்களிடமும், அரசியல் ரகசியங்களையும் அரச தந்திரச் செய்திகளையும் விதிவிலக்காக நம்பிக் கூடச் சொல்லாதே! இரத்தினமாலையிடம் கூட நான் சொல்லலாம் என்று குறிப்பவற்றை மட்டுமே சொல்ல வேண்டும்’, என்று தன்னிடம் பணிகளை ஒப்படைக்கு முன்னர் மதுராபதி வித்தகர் தனக்குக் கூறியிருந்த அறிவுரை மீண்டும் தன் செவிகளில் ஒலிப்பது போலிருந்தது அவனுக்கு. அவள் மேலும் எதையும் தன்னிடம் கேட்பதற்கு முன், அவனே பேசத் தொடங்கினான்.

“உங்கள் தந்தையார் வீடு திரும்பியதும், அவரிடம் நான் இங்கே வந்து போனதாகச் சொல்லுங்களம்மா! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் என்னிடத்துக்கு அவர் தேடி வரக் கூடாது என்பதையும் அவரிடம் நீங்கள் சொல்லி விட வேண்டும். அது அவருக்கே அபாயத்தை உண்டாக்கி விடும். நானே மீண்டும் நாளை அல்லது மறு நாள் இங்கு வந்து அவரைக் காண்பேன். களப்பிரர்கள் நெல் உதவியை மனத்திற் கொண்டு உங்கள் தந்தையாரைப் பகைத்துக் கொள்ள அஞ்சுகிறார்களே ஒழிய முழுமையாகச் சந்தேகம் நீங்கியிருப்பதாகச் சொல்ல முடியாது. அவர் எங்கெங்கே போகிறார், வருகிறார், யாரைக் காண்கிறார், என்ன என்ன பேசுகிறார் - என்பதை அறிவதற்காகவே அவரைக் கட்டுக் காவல் இன்றி வெளியே உலவ விட்டிருக்கிறார்களோ என்று கூட நான் நினைக்கிறேன்” என்று மகளிடம் தந்தையைப் பற்றிப் பொதுவாக எச்சரித்தான் அவன். இதற்குள் காராளரின் மனைவி ஒர் ஒலைக் கூடை நிறைய அவன் தின்பதற்குச் சுவையான பணியாரங்களைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பணியாரங்களை அங்கேயே அமர்ந்து தின்பதற்கும் நேரமில்லாமல், அடுத்த வேலையின் இன்றியமையாத நிலையை நினைத்தான் அவன். காராளர் மனைவி கொடுத்த பணியாரங்களை வாங்கி மேலாடையில் முடிந்தபடி கொற்றவைக் கோவில் வன்னி மரத்தடிக்கு அவன் விரைந்தான். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/292&oldid=946454" இலிருந்து மீள்விக்கப்பட்டது