பக்கம்:நித்திலவல்லி.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

295


ஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்ட போது, அந்த நெற்களத்தின் ஒரத்திலிருந்த பனை மரத்தடி மேட்டில் அமர்ந்து, காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில், அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தன. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூத பயங்கரப் படைவீரன்தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர் கொள்கிறானோ, அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர் கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை, அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால், தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும், தடையாகவும் நேர்ந்து விடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான்.

கொல்லன் நினைத்த படி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம், கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான்.

வந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில், ஒலிப் பிழை கூட நேராமல், தெளிவாகக் 'கயல்' என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன், இதை முற்றிலும் எதிர் பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து, இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்து விட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப் பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/294&oldid=946497" இலிருந்து மீள்விக்கப்பட்டது