பக்கம்:நித்திலவல்லி.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


தனக்கென்ன அதிகாரம் என்ற தயக்கமும், அதே சமயம் அந்த இடத்தில் அப்போது தனக்குத் தேவையான தனிமையை நாடும் மனமுமாக இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தான் பிள்ளையாண்டான். அவன் நிலையைக் கண்டு கொல்லனால் சிரிப்பை அடக்க முடியாவிட்டாலும், சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

“ஐயோ பாவம்! இவ்வளவு தவிக்கிறானே, இவனுக்கு சிறிது தனிமையைக் கொடுத்துத்தான் பார்க்கலாமே’ என்று கொற்றவைத் தெய்வத்தை வலம் வருவதற்குப் போனான் கொல்லன். கொற்றவையை ஒன்பது முறை வலம் வந்து, ‘பாண்டி மரபுக்கு விரைவில் நல்ல காலம் பிறக்க வேண்டும்: என்று பிரார்த்தனை செய்த பின் கொல்லன் வன்னி மரத்தடிக்குத் திரும்பியபோது, இவனைத் தவிர்க்க விரும்பியவன் போல் அவன் எழுந்து வலம் வருவதற்குச் சென்றான். இம்முறை கொல்லன் பிடிவாதமாக வன்னி மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். இவனைத் தவிர்ப்பதற்காக வலம் வரச் சென்ற பிள்ளையாண்டான், மறுபடி வன்னி மரத்தடிக்கு வந்து பார்க்கும் போது இவன் அங்கேயே இருக்கக் கண்டு திகைத்தான். அந்த நிலையில் கொல்லனே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவனருகே சென்று ‘பெருஞ்சித்திரன்’ என்று மெல்ல அழைத்தான். அந்த அழைப்பின் மூலம் 'இவன்தான் நாம் காண வந்தவனா?’, என்ற வியப்பை அடைந்த இளைஞன் அடுத்த அடையாளத்தையும் உறுதி செய்து கொள்ளக் கருதி,

“எண்ணிக்கை?”, என்று கொல்லனை நோக்கி வினாவும் தொனியில் கேட்டான். கொல்லனும் உடனே ஒரு கணம் கூடத் தயங்காமல் “ஒன்பது?” என்றான். அவனோ மேலும் விடாமல் ‘எவை ஒன்பது?’ என்று வினாவைத் தொடர்ந்தான். பொறுமை இழந்து விடவோ, சினம் கொள்ளவோ செய்யாமல், “முத்துகள்-கொற்கைத்துறை முத்துகள்” என்று ஒரு முறைக்கு இருமுறையாக அழுத்திச் சொன்னான் கொல்லன். உடனே வந்திருந்த இளைஞன் தன் இடுப்புக் கச்சையிலிருந்து சிறிய பட்டுத் துணி முடிப்பு ஒன்றை எடுத்து அவிழ்த்து, ஒன்பது முத்துகளை எண்ணித் தேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/299&oldid=946509" இலிருந்து மீள்விக்கப்பட்டது