பக்கம்:நித்திலவல்லி.pdf/306

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

307


விடுவார்கள். வீரர்களின் கூட்டத்தில் இவனைப் போன்றவர்கள் இருக்க முடியாது; இருக்கக்கூடாது!...” என்றான் உடன் வந்த ஆபத்துதவி. கொல்லன் அதைக் கேட்டுக் கொண்டானே தவிர, தன் கருத்தை அவனிடம் வாய் விட்டுக் கூறவில்லை. அவன் மனத்தில் அப்போது மிக,மிக இன்றியமையாததான வேறொரு சிந்தனை தோன்றிக் கவலையையும், எச்சரிக்கையையும் அளித்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களைப் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஒரே அடையாள வார்த்தையாக எது இருந்ததோ, அதைப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த களப்பிர வீரன் ஒருவன் தன்னிடமே சோதித்துப் பார்க்க வந்ததை நினைத்த போது கொல்லனுக்கு இதயம் கொதித்தது. இந்த அபாயம் உடனே தவிர்க்கப்பட முடியாவிடில், பாண்டிய நாட்டில் பல இடங்களில் பல வீரர்கள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்வார்கள் என்று தெளிவாகவே புரிந்தது. இந்த இரகசியம் எந்த முனையிலிருந்து எப்படி அவர்களுக்கு எட்டியிருக்க முடியும் என்று கொல்லனால் அநுமானம் செய்யவே முடியாமலிருந்தது. பாண்டிய வீரர்கள் இருவர் சந்திக்கும் போதே, மிக அருகிலிருந்து மறைவாய்க் கவனித்து ஒட்டுக் கேட்ட யாரோ ஒரு களப்பிரன் மூலமாகவோ, அல்லது எதிரே வந்து சந்திப்பவன் யாரென்று தெரியாமலே, மாற்றானிடம் அவசரப்பட்டுத் தன் நல்லடையாளச் சொல்லைத் துணிந்து கூறி விட்ட ஒரு பாண்டிய வீரன் மூலமாகவோ, மிக அண்மையில்தான் இந்த இரகசியம் அம்பலமாகியிருக்க முடியும் என்று தோன்றியது. வேறு விதமாக நினைக்க முடியவில்லை.

பாண்டிய நாடெங்கும் மறைந்து, ஆழமாக வேரோடி யிருக்கும் பாண்டியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளைப் பொழுது விடிவதற்குள் பழைய நல்லடையாளச் சொல்லை உடனே கைவிட வேண்டும் என்றும் புதிய நல்லடையாளம் என்ன என்றும் விரைந்து அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/306&oldid=946523" இலிருந்து மீள்விக்கப்பட்டது