பக்கம்:நித்திலவல்லி.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



மேலும் இரண்டு நாழிகைப் பயணத்துக்குப் பின், பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த மலைக் குகைக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.

உடன் வந்த ஆபத்துதவி வெளியிலேயே நின்று கொண்டான். கொல்லன் உள்ளே நுழைந்த போது தீப்பந்த ஒளியில் அவர் ஒலைச் சுவடியில் எழுத்தாணியால் ஏதோ அழுத்திக் கீறிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு நிமிர்ந்ததும், அவர் தன்னைக் கேட்ட முதல் கேள்வியே கொல்லனை வியக்கச் செய்தது. “வா! இங்கிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது முதல் இந்த விநாடி வரை நம்முடைய நல்லடையாளச் சொல்லை, எங்காவது நீ பயன்படுத்த நேர்ந்ததா?”

தன் மனத்தில் எதைப் பற்றிய சிந்தனை மேல் எழுந்து நிற்கிறதோ, அதைப் பற்றியே அவரும் கேட்கிறாரே என்று மனத்தில் எழும் வியப்புடன் வணங்கி, அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.

“இல்லை. ஐயா!...ஆனால்... ?”

“ஆனால்....... என்ன?”

திருமோகூர் நெற்களத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக, களப்பிரன் ஒருவன் அதே நல்லடையாளச் சொல்லுடனே தன்னை அணுகிச் சோதனை செய்ததையும், அதன்பின் நடந்தவற்றையும் ஒன்று விடாமல் அவரிடம் விவரித்தான் கொல்லன்.

எல்லாவற்றையும் பரபரப்பு எதுவும் அடையாமல், செவிமடுத்த பின் அவர் கூறலானார்.

“இன்று பிற்பகல் என் மனத்தில் ஏதோ பொறி தட்டுவது போல் தட்டுப்பட்டது. உடன், 'நம்முடைய நல்லடையாளச் சொல்லை மாற்றி விட வேண்டும்’ என்று நானே நினைத்தேன். என் மனத்தில் பட்ட படியேதான் நடந்திருக்கிறது இருக்கட்டும்... எங்கே அந்த முத்துகள்...?”

கொல்லன் முத்துகளைக் கொடுத்த போது, இயல்பை மீறி அவர் எழுந்து நின்று அவற்றை இரு கைகளாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/307&oldid=946524" இலிருந்து மீள்விக்கப்பட்டது