பக்கம்:நித்திலவல்லி.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

309


வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொள்ளவே, அது அவனுக்குப் புதுமையாகத் தோன்றியது. அந்த முத்துகளில் ஏதோ மிகப் பெரிய மதிப்புக்கான அந்தரங்கம் அடங்கியிருக்க வேண்டும் என்று அவன் புரிந்து கொண்டான். இவ்வளவு பெரிய பொறுப்பைத் தாங்கி வந்த விடலை இளைஞனை எண்ணினான் அவன். இப்படி அவன் எண்ணிக் கொண்டிருப்பதை அப்படியே பிரதிபலிப்பது போல் அந்தக் கணமே-

“வாகனங்களை விட அவை எவ்வளவு மதிப்புக்குரியவற்றைச் சுமந்து வருகின்றன என்பதுதான் பெரிது. அந்த இளைஞன் நீ எதிர்பார்த்தபடி இல்லாதது உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்!”, என்று சொல்லி முகம் மலர்ந்தார் அவர். இந்த நிலையில் அவர் முன்பாக எதையுமே நினைப்பதற்குப் பயந்தான் கொல்லன். நினைப்பில் கூட எதையும் மறைக்க விடாதவருக்கு முன், நினைக்கவே தயங்கினான் அவன். ஏதோ குழப்பம் வரலாம் என்று தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே உணர்ந்து முத்துகளோடு வருகிறவனையும், தன்னையும் பழைய நல்லடையாளச் சொல்லைத் தவிர்க்கச் செய்த அவர் மதி நுட்பத்தை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பழைய நல்லடையாளச் சொல் தன்னையும் அபாயத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று இப்போது அவன் எண்ணினான். அப்போது மீண்டும் அவர் குரல் கணிரென்று ஒலித்தது.

“பல தலைமுறைகளின் புனிதமான உணர்வுகளும், அந்தரங்கங்களும் இந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கிறது. எனவே நாளை வைகறையிலிருந்து ‘நவநித்திலம்’ என்ற தொடரையே நம்முடைய புதிய நல்லடையாளச் சொல்லாக நியமிக்கிறேன். இந்தப் புதிய நல்லடையாளம் பற்றிப் பிறர் புரிந்து கொள்ள முடியாத சித்திரக் கரந்தெழுத்துகளால் இந்த ஒலையில் எழுதியிருக்கிறேன். இந்த ஒலையை எடுத்துச் சென்று விடிவதற்குள், வையையின் திருமருத முன் துறையில், கிழக்கு மேற்காக எண்ணினால், ஏழாவது மருத மரத்தின் அடிப்பொந்தில் வைத்து விடும் பணியை நீ உடன் செய்யப் புறப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/308&oldid=946525" இலிருந்து மீள்விக்கப்பட்டது