பக்கம்:நித்திலவல்லி.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நித்திலவல்லி / முதல் பாகம்


என்பது உன் ஐயப்பாடாக இருக்கலாம். கபாடங்களில் முத்துக்கள் ஒளிரும் மதுரைக் கோட்டையில் மறுபடி பாண்டியர்களின் புகழ் பெற்ற மீனக் கொடி பறக்கிறவரை நான் சாகக் கூடாது என்று எனக்குள் நானே உறுதி செய்து கொண்டிருக்கிறேன். காடுகளிலும், மலைகளிலும், ஊர்ப்புறமான தோட்டங்களிலும் மறைந்து வாழும் எனக்கு நச்சுப் பிராணிகளாலும், கொடிய விலங்குகளாலும் எதுவும் நேர முடியாதபடி என் சரீரத்தைப் பழைய முனிவர்களின் மருந்து முறைப்படி புடம் போட்டு வைத்திருக்கிறேன். இதோ என் கையிலிருக்கிறதே காஞ்சிரங்காய்; இதில் அணுப்பிரமாணம் நீ தின்றாலும் உன் சரீரம் அடுத்த சில விநாடிகளில் நீலம் பாய்ந்து மூச்சுத் திணறி நீ இறந்து விடுவாய். ஆனால் எனக்கோ இது மாங்காய் தின்பது போல் விருப்பமான காரியம். பாண்டியர்களின் அடையாளப் பூவைத் தருவது என்பதாலோ என்னவோ எனக்கு வேப்பங் கொழுந்து என்றால் கொள்ளை ஆசை. வேப்பங்கொழுந்தை மையாய் அரைத்து வெண்ணெய் போல் மிருதுவாகும்படி செய்து இரண்டு மாங்காய் அளவு உண்பேன். இந்திரியங்களை வற்றச் செய்து இப்படிப் புடம்போட்டு இந்த உடலை நான் காப்பதெல்லாம் எதற்குத் தெரியுமா?”

“தெரியும் ஐயா! அதற்காகப் பாண்டிய மரபின் கடைசித்துளி இரத்தமும் உங்களுக்கு நன்றியுடையதாக இருக்கும்! ‘நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை’ என்று நேற்றிரவு தாங்கள் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது.”

“அதனால் உலகோர் உண்ணும் பிற உணவுகளை நான் வெறுக்கிறேன் என்று பொருளில்லை. அவற்றையும் நான் உண்பது உண்டு. ஆனால் எதை எதை நான் உண்ணலாம் என்பதற்கும், எதை எதை நான் உண்ணக்கூடாது என்பதற்கும் கடுமையான நியமங்கள் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

அவனிடம் பேசிக் கொண்டே சர்ப்பங்களை ஒவ்வொன்றாகப் புற்று வாயில் எடுத்து விட்டார் அவர். கருமை ஒழுகுவது போல் படமும் உடலும் மின்னும் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/31&oldid=715012" இலிருந்து மீள்விக்கப்பட்டது