பக்கம்:நித்திலவல்லி.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

311



“இதற்கு மேல் உங்கள் ஏவல் பலிக்காது! பேசாமல் மறுபடியும் சிறைக் கோட்டத்துக்குள் போய்ச் சேருங்கள். இனிமேல் தப்ப முடியும் என்று கனவு கூடக் காணாதீர்கள்!” என்று கடுமையான குரலில் அவர்களை நோக்கி அறைகூவினார் மாவலி முத்தரையர்.

இந்த அறைகூவலுக்கு மாந்திரீகன் செங்கணானோ, அழகன் பெருமாளோ, தென்னவன் மாறனோ, மாவலி முத்தரையரை நோக்கி மறுமொழி கூறிச் சீறவில்லை; என்றாலும் தங்களுக்குள் ‘மேலே என்ன செய்வது’ என்ற வினாவும் முகக் குறிப்பில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தென்னவன் மாறன் மாவலி முத்தரையரை நோக்கி ஏதோ கடுமையாக மறுமொழி சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு, ‘இப்போது அவருக்கு எதுவும் பதில் சொல்ல வேண்டாம்’ என்பது போல் கண் பார்வையாலேயே குறிப்புக் காட்டி விட்டான் அழகன் பெருமாள். இவர்கள் ஒடுங்கி விட்டார்கள் என்பதாக இந்த அமைதியைப் புரிந்து கொண்ட மாவலி முத்தரையர் தம்முடைய ஏவலை மீட்டுக் கொண்டார். ஒநாய்களும், நரிகளும் மறைந்தன. மாவலி முத்தரையர் திமிரான குரலில் மீண்டும் கூறினார்:

“இரவு நேரமாகி விட்டது. பாவம்! நீங்கள் எல்லாரும் மிகவும் களைத்திருப்பீர்கள். சிறையில் போய் இன்றிரவாவது உறங்குங்கள். நாளைக் காலையில் ஒருவேளை உங்கள் தலைவிதியின் கோர முடிவை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்!”

இதைக் கேட்டுக் குறளன் உதடுகளைப் பிதுக்கி முகத்தைக் கோணி மாவலி முத்தரையருக்கு அழகு காட்டினான். நண்பர்களின் உயரமான உருவங்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்ததனால், அவனுடைய குள்ள உருவம் அழகு காட்டியதை நண்பர்கள்தான் காண முடிந்ததே ஒழியக் கதவுக்கு வெளியே நின்ற மாவலி முத்தரையர் காண முடியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/310&oldid=946527" இலிருந்து மீள்விக்கப்பட்டது