பக்கம்:நித்திலவல்லி.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

315


களைத் தான் பாலியில் கூறிய வரை எதிரிலிருக்கும் மனிதர்கள் அடக்கமாகவும், அமைதியாகவும் இருந்தது மாறித் தானே தமிழில் கட்டளையிட்டதும் புரிந்து கொண்டு பொங்கி எழுகிறார்களா, இல்லையா என்பதை அவன் கவனிக்கவும், கணிக்கவும் முயலுவது போலிருந்தது. அப்படி அவன் தமிழில் கட்டளையிட்ட போதும் இவர்கள் எந்த மாறுதலையும் காண்பிக்கவில்லை. குறளன் மட்டும் யாரும் தன்னைப் பார்க்காத வேளையில் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணி அழகு காட்டி முடித்துக் கொண்டான். மற்றவர்களின் இடுப்பு உயரத்தில் இவன் முகம் இருந்ததால், மற்றவர்கள் முகங்களையும், இவன் முகத்தையும் ஒரு சேரப் பார்ப்பது என்பது ஒரே சமயத்தில் இயலாது. மற்றவர்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் போது, இவன் முகம் தெரியாமலும், இவன் முகத்தை மட்டுமே நேருக்கு நேர் பார்த்தாலோ, மற்றவர்களின் இடுப்புகள் மட்டுமே தெரிவது போலவும் இருந்ததனால், எல்லார் முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த படைத் தலைவனால் இவன் அழகு காட்டியதைக் கவனிக்க முடியாது போயிற்று. யாரை மீட்பதற்காகக் கோட்டைக்குள் வர நேர்ந்ததோ அவனையே வேறு சிறைக் கோட்டத்துக்கு மாற்றிக் கொண்டு போகிறார்கள் என்பது அழகன் பெருமாளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது என்றாலும், அதை எப்படித் தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பதுதான் புலப்படவில்லை. மாவலி முத்தரையர் பயமுறுத்திவிட்டுச் சென்றது போல் தென்னவன் மாறனுக்கோ, மற்றவர்களுக்கோ உயிர் அபாயம் ஏற்படுமுன் தப்பி விட வேண்டும் என்ற தவிப்பு மட்டும் உள்ளுற அழகன் பெருமாள் மனத்தில் இருந்தது. அவன் இப்படி நினைத்துத் தவித்துக் கொண்டிருந்த போதே அவனும், மற்றவர்களும் காணத் தென்னவன் மாறனையும், மல்லனையும் அங்கிருந்து வேறு சிறைக் கோட்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

இருவரும் போகும் போது கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. படைத் தலைவன் கவனக் குறைவாயிருந்த ஒரு கணத்தில், ‘கவலைப்பட வேண்டாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/314&oldid=946531" இலிருந்து மீள்விக்கப்பட்டது