பக்கம்:நித்திலவல்லி.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


நான் என்ன சொல்கிறேன் என்று பொறுத்திருந்து பார்த்த பின், அதற்கு ஏற்ப நீங்களும் நடந்து கொள்ள வேண்டும். பதற்றமோ, அவசரமோ கூடாது. எதிரிகள் நண்பர்கள் போல் வந்து பேச்சுக் கொடுப்பதும், இங்கே இருக்கும். எச்சரிக்கை தேவை.” என்று தெளிவாக அறிவுரை கூறியிருந்தான் அவன். இதைக் கூறிய பின், தேனூர் மாந்திரீகனிடம் அவன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்: “செங்கணான்! உன்னிடம் மை போட்டுப் பார்க்கத் தேவையான சாதனங்கள் இருக்குமானால், தயை கூர்ந்து நம் தென்னவன் மாறனையும், மல்லனையும் இந்த அரண்மனைக்குள்ளோ, சிறைக் கோட்டத்திற்குள்ளோ எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடித்துச் சொல்ல முடியுமா?”

செங்கணான் உடனே தன் மேலாடை முடிப்பிலிருந்து யாளியின் முகம் போன்ற அமைப்பை உடைய ஒரு சிமிழை எடுத்துத் திறந்து, ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கண்களை மூடி எங்கேயோ, எதையோ, மனக் கண்ணில் பார்ப்பவனைப் போல் தேடி விட்டுச் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தான். எல்லோரும் அவன் என்ன கூறப் போகிறான் என்பதையே ஆவலோடு கவனித்தார்கள்.

“இப்போது நாம் நின்று பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சிறைக் கோட்டத்துக்கு நேர் கீழே இருட்கிடங்காக இருக்கும் பாதாளச் சிறையில் தென்னவன் மாறனும் மல்லனும் இருக்கிறார்கள். அந்தப் பாதாளச் சிறைக் கோட்டம் கோட்டையின் அகழிகளுக்கும் கீழே இருப்பதால், நீர் கசியும் தரையில் அமரவும் முடியாமல், படுக்கவும் வழியின்றி அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு செய்தி...” என்று சொல்லிக் கொண்டே வந்த மாந்திரீகன் திடீரென்று தன் மனத்தை மாற்றிக் கொண்டவன் போல் அந்தச் செய்தியை மட்டும் அழகன் பெருமாளின் காதருகே கூறினான். அந்தச் செய்தி என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் மற்றவர்கள் மனத்தில் அதிகரித்தது. அந்த இரகசியச் செய்தியை மாந்திரீகன் தன் காதருகே கூறிக் கொண்டிருந்தபோது, அழகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/317&oldid=946534" இலிருந்து மீள்விக்கப்பட்டது