பக்கம்:நித்திலவல்லி.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31


சர்ப்பமும் கொடியாய் வழிந்து அவர் கையிலிருந்து புற்றில் இறங்கும் காட்சி மீண்டும் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

‘'நீ போய்த் தாமரைப் பொய்கையில் நீராடி வரலாம் இளையநம்பீ! இங்குள்ள மிகப்பெரிய தாமரைப் பொய்கை நேர் மேற்கே மூங்கில் தோப்புக்களின் நடுவே இருக்கிறது. உன்னுடைய உணவு வசதிகளைப் பற்றிக் கவலைப்படாதே. திருமோகூர்ப் பெரியகாராளர் மனையில் நெய்யும் மிளகும் கமகமவென்று மணக்க உனக்கு விருந்து கிடைக்கப் போகிறது. இன்னும் சிறிது நேரத்தில் பெரிய காராளர் உன்னை அழைத்துப் போக இங்கு வருவார். உங்கள் திருக்கானப்பேர் நகரம் முல்லை நிலம் சூழ்ந்திருப்பதாலும் பசுக்கள் மிகுந்திருப்பதாலும் நன்றாக உறையிட்ட தயிருக்கு அது புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஊர்ப் பெரியகாராளர் வீட்டு வெண் பொங்கலும், மோர்க் குழம்பும், நெய் அதிரசங்களும் இணையிலாச் சுவையுடையனவாக இருக்கும். நீ கொடுத்து வைத்தவன்.”

“ஐயா! தலைநகருக்கு அடியேன் எப்போது புறப்பட வேண்டியிருக்கும்?”

“போய் நீராடிவிட்டு வா... உன்னுடைய பயணமும் பெரியகாராளர் இங்கு வந்த பின்புதான் முடிவாகும்!”

அவன் மரப் பொந்திலிருந்து வெளியேறி இரண்டுபாக தூரம்கூட நடந்திருக்க மாட்டான், பின்புறமிருந்து அவருடைய குரல்; “தம்பீ! இதையும் கேட்டு விட்டுப் போ” -என்று மீண்டும் கூப்பிடவே அவன் விரைந்து திரும்பி அவரை நோக்கி நடந்தான்.

“உன்னிடம் ஒர் எச்சரிக்கை; உன்னுடைய வலது தோளின் மேற்புறம் சங்குபோல் ஒரு தழும்பு இருக்கிறதில்லையா, அந்தச் சங்குத் தழும்பை இன்றோ, இனி எதிர்காலத்திலோ நீ நீராடும் போதோ மேலங்கியைக் களைந்து ஒய்வு கொள்ளும்போதோ அந்நியர் எவரேனும் வெறித்துப் பார்த்தால் எச்சரிக்கையாயிரு! அது உன் வாழ்வுக்கு அபாயத்தைத் தேடி வரலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/32&oldid=715022" இலிருந்து மீள்விக்கப்பட்டது