பக்கம்:நித்திலவல்லி.pdf/322

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

323



“'எதைச் சொல்லுகிறீர்கள்' என்று இப்போது இதைக் கேட்கும் பெண்ணழகி மட்டும் இங்கு விதி விலக்காகி விட்டாள் என்றேன்.”

“உண்மையான அன்பு என்பது ஒரு விதி விலக்கில்லை. என் அன்பை நீங்கள் விதி விலக்காகக் கூறுவது எனக்கே பிடிக்கவில்லை. என் அன்பை, நீங்கள் அப்படி அலட்சியமாக நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்க முடியாது.”

“என் மேல் உண்மையான அன்பு இருக்குமானால் நீ எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும்.”

“என்ன உதவி? செய்ய முடிந்த உதவியாயிருந்தால், நிச்சயம் செய்யலாம்.”

“செய்ய முடியாத உதவியாயிருந்தாலும் செய்வதுதான் உண்மை அன்பு.”

“செய்ய முடியாததற்கும் செய்யக் கூடாததற்கும் வேறுபாடு உண்டு.”

“அன்பு என்ற அடிப்படையில் பார்க்கும் போது, எதிலும், எதற்கும் வேறுபாடு கிடையாது என்பது நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. மனிதர்களுக்கும், அவர்களுடைய கருத்துகளுக்கும் நடுவே உள்ள வேறுபாடுகளையும், இடைவெளிகளையும் குறைப்பதுதான் அன்பு. பொது அன்பின் இலக்கணமே இதுதான் என்றால், பிரியத்தின் விளைநிலமாகிய பெண்களின் அன்பு இன்னும் சிறப்பாயிருக்க வேண்டும்...”

“காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கு ஏற்ற இனிய வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறீர்கள் நீங்கள்!”

“ஆனாலும் என் காரியம் இன்னும் சாதிக்கப்பட்டு முடியவில்லை.”

அவள் இதற்கு மறுமொழி கூறவில்லை. நளினமும் அழகும் நிறைந்த புன்னகை ஒன்று அவள் இதழ்களில் தோன்றி மறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/322&oldid=946539" இலிருந்து மீள்விக்கப்பட்டது