பக்கம்:நித்திலவல்லி.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

325


கேட்கும். இப்போதும் அப்படியே யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கேட்டது. இளைய நம்பியும், இரத்தினமாலையும் அடைப்புக் கல்லின் அருகே நின்று, கீழே யாரோ படியேறி வரும் ஒசையைக் கேட்டனர். கூர்ந்து செவிமடுத்ததில் கீழே ஒருவர் நடந்து படியேறி வரும் ஓசைதான் கேட்டது. என்றாலும், இரத்தினமாலை மிகவும் முன் எச்சரிக்கையோடு,

“வருவது யார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் நீங்கள் இங்கே எதிர்ப்பட்டு நிற்பது நல்லதில்லை. தயை கூர்ந்து நீங்கள் மறைந்திருக்க வேண்டும். இது நான் உங்களுக்கு இடும் ஆணையில்லை. அன்புக் கட்டளை” என்று இளையநம்பியிடம் கூறினாள். அவள் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டான்.

“அன்புக் கட்டளை என்பது பொன் கூண்டில் சிறை வைக்கிறேன் என்பது போன்றதுதான். இடுகின்ற சிறையைப் பொன் கூண்டில் வைத்து இட்டால் என்ன? இரும்புக் கதவுகளின் இடையே வைத்து இட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான்" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு மறைந்து நிற்பதற்காக, வெளியேறிச் சென்றான் இளையநம்பி.

நிலவறைப் பாதை வழியே வந்து கொண்டிருப்பது தன் மனிதர்களில் ஒருவரா அல்லது வேற்றவரா என்பதை வந்து கொண்டிருப்பவரின் முகம் தெரிந்தால் அன்றிப் புரிந்து கொள்ள முடியாது என்பதனால், இளைய நம்பியை மறைந்திருக்குமாறு வேண்டினாள் அவள்.

காலடியோசை மேல் நோக்கி நெருங்க நெருங்க அவள் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. இதோ மேல் அடைப்புக் கல் நகர்த்தப்படும் ஓசையும் கேட்கிறது. அவள் மனத்துடிப்புப் பெருகி வளர்கிறது.

இருளிலிருந்து கோணிய முகத்தில் பெரியதாகச் சிரிக்கும் வாயுடன் அந்துவனின் தலை தெரிந்த பின்புதான், அவள் கவலை நீங்கி, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “திருக்கானப் பேர் நம்பியை எங்கே காணோம்? இன்னும் உறக்கம் நீங்கித் திருப்பள்ளி எழுச்சி ஆகவில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/324&oldid=946541" இலிருந்து மீள்விக்கப்பட்டது