பக்கம்:நித்திலவல்லி.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


நம்மவர்களிடம் இருக்கிற மிகப் பெரிய குறைபாடு இதுதான். விழித்துக் கொள்ள வேண்டிய சமயத்தில் உறங்கிப் போய் விடுவதும், உறங்க வேண்டிய சமயத்தில் அவசியமில்லாமல் விழித்துக் கொண்டிருப்பதுமே வழக்கமாகி விட்டது. அதனால்தான் நம்முடைய பல காரியங்கள் கெட்டுப் போய் விடுகின்றன" என்று பொதுவாகக் குற்றம் கூறிக் கொண்டே வந்தான் இருந்த வளமுடையார் கோயில் யானைப் பாகன் அந்துவன். குரலைக் கேட்டு மறைந்து வெளியேறி நின்றிருந்த, இளைய நம்பியும் உள்ளே வந்து சேர்ந்தான். உள்ளே வந்ததுமே, இளைய நம்பி அந்துவனைக் கேட்டான்;

“என்ன அந்துவன்? இருந்த வளமுடைய பெருமாளுக்கு இன்று காலைப் பொழுது புலர்ந்ததும், உன்னுடைய முகத்தில் விழிக்கும் வாய்ப்புக் கிடைக்க விடாமல் இங்கே வந்து விட்டாய்?”

“என்ன செய்வது ஐயா? இருந்த வளமுடைய பெருமாளை விட அதிகமான அபாயத்திலிருக்கும் உங்களைப் போன்ற ஒருவருக்கு அந்த நல்ல வாய்ப்பைத் தர வேண்டியிருந்தது. அதனால்தான், இங்கே புறப்பட்டு வந்தேன். கோவிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுத்து வர வைகைக்குப் புறப்படும் போது, நான் இன்று உங்களைத் தேடி இங்கே வருகிற திட்டம் எதுவும் இல்லை. திருமருத முன் துறைக்கு வந்த பின்பே உங்களை இன்றே, இப்போதே உடனே சந்தித்தாக வேண்டியிருந்த காரியம் ஏற்பட்டு விட்டது.”

“அது என்ன அத்தனை அவசரமான காரியம்?”

“இதோ, இதைப் பார்த்தால் புரியும் பெரியவரிடமிருந்து இந்த ஒலை இன்று அதிகாலையில் திருமருத முன் துறையில் எனக்குக் கிடைத்தது” என்று அதை எடுத்து நீட்டினான் அந்துவன்.

இப்படி இந்த ஒலையை அந்துவன் நீட்டிய போது இளையநம்பியையும் முந்திக் கொண்டு விரைந்து அவன் கையிலிருந்து அந்த ஒலையைப் பறிப்பது போல் வாங்கினாள் இரத்தினமாலை. விரைவோடு விளக்கருகே கொண்டு போய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/325&oldid=946542" இலிருந்து மீள்விக்கப்பட்டது