பக்கம்:நித்திலவல்லி.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

327


சித்திரக் கரந்தெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த ஒலையைப் படிக்கவும் செய்தாள் அவள். தான் படித்த பின், இரண்டாம் முறையாக இளையநம்பியும் கேட்கும்படி வாய் விட்டுப் படித்தாள் அவள். அந்த ஒலையைப் படித்து முடித்ததும், ஒரிரு விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. அந்துவன்தான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தான்.

“பெரியவர் விரைந்து அறிவித்திருக்கும் இந்தப் புதிய ‘நல்லடையாளம்’ நம்மவர்கள் எல்லாருக்கும் உடனே அறிவிக்கப்பட வேண்டும், பழைய நல்லடையாளம் எப்படியோ எங்கோ, எப்போதோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது! அதனால்தான் பெரியவர் விரைந்து இதை அறிவித்திருக்கிறார். அதோடு திருக்கானப் பேர் நம்பி மிகமிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருப்பதைப் பார்த்தீர்கள் அல்லவா?”

இந்த வினாவுக்கு இரத்தினமாலை மறுமொழி கூறினாள்;

“பார்த்தேன்! இந்தப் பொன் கூண்டிலிருந்து இவர் தப்ப ஆசைப்படும் வேளை பார்த்து, அதன் கதவுகளை இன்னும் இறுக்கி மூடச் சொல்லி, இந்த ஆணை கிடைத்திருக்கிறது.”

இளையநம்பி எதுவும் பேசவில்லை. மெளனமாக அந்துவன் முகத்தையும், இரத்தினமாலையின் முகத்தையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

“புறாக்களின் மூலமும், பறவைகளின் மூலமும் கொற்கை முதலிய தென்பாண்டி நாட்டு ஊர்களில் உள்ள நம்மவர்களுக்கு இச்செய்தியை உடன் அனுப்ப வேண்டும். சிறு சிறு ஒலை நறுக்கில் இரகசிய எழுத்துக்கள் மூலம் எழுதி, பழகிய புறாக்களின் கால்களிலும், பழகிய பறவைகளின் கால்களிலும் கட்டி அனுப்ப வேண்டும். இப்போது நான் விரைந்து திரும்ப வேண்டும். இல்லையானால், என்னோடு வந்து திருமருத முன் துறையிலே காத்திருக்கும் மற்ற யானைப் பாகர்களும், ஊழியர்களும் என்மேல் ஐயப்படுவார்கள். மேல் பாண்டி நாட்டுக்கும் கீழ் பாண்டி நாட்டுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/326&oldid=946543" இலிருந்து மீள்விக்கப்பட்டது