பக்கம்:நித்திலவல்லி.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நித்திலவல்லி / முதல் பாகம்


“ஐயா! அது தங்களுக்கு எப்படித் தெரியும்? “இந்தப் பிள்ளையின் எதிர்க்கால நன்மைக்காக” என்று சிறுவயதில் யாரோ ஒரு பெரியவர் அந்த அடையாளத்தை நெருப்பில் காய்ச்சி இட்டதாக என் பாட்டனார் சொல்லியிருக்கிறார். நீங்களோ இப்போது அதனால்தான் எனக்கு அபாயங்களே வரும் என்கிறீர்கள்?”

“உனக்கும், இன்னும் வேறு நான்கு குழந்தைகளுக்கும் தாமிரத்தில் சிறிய அழகிய வலம்புரிச் சங்குபோல வார்த்து அதை நெருப்பில் காய்ச்சி அந்த முத்திரையை இட்டதே நான்தான். ஐந்து குழந்தைகளுக்கு நான் அந்த முத்திரையை இட்டேன். அவர்கள் ஐவருமே இன்று உயிரோடிருந்தால் உன்னைப்போல் சுந்தர வாலிபர்களாயிருப்பார்கள். இரண்டு பேரைக் களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்று விட்டார்கள். இன்னும் மூன்று பேர் மீதியிருக்கிறீர்கள். நான் இட்ட மங்கல முத்திரையின் நற்பயனை இவர்கள் மூவருமாவது அடைய வேண்டும் என்பது என் விருப்பம்.”

“மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள் ஐயா?”

“இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ! நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்.”

இந்த விஷயம் அவனுக்குப் பெரும் புதிராக இருந்தும் இதைப் பற்றி அவரிடம் மேலும் மேலும் வினாவிக் கொண்டிருப்பது நன்றாயிராதென்று எண்ணி, அவருடைய எச்சரிக்கையை மட்டும் அப்படியே ஏற்றுக்கொண்டு நீராடிவர நடந்தான் இளையநம்பி.

வயல் வெளிகளில் இளங்காற்றில் ஆடும் பசும் பயிர்ப்பரப்பிலும், குளங்களில் மலர்ந்த தாமரைப் பூக்களிலும், பனித்துளி முத்துக் கோத்த புல் நுனிகளிலும் சிவந்து கொண்டிருந்த கீழ் வானத்திலும் வைகறையின் அழகுகள் சிதறியிருந்தன. தண்ணீர் நிரம்பியிருக்கும் இடமெல்லாம் தாமரை பூத்திருந்த அந்த ஊரின் வளமும் செழிப்பும் அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/33&oldid=715033" இலிருந்து மீள்விக்கப்பட்டது