பக்கம்:நித்திலவல்லி.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கோயிலில் சந்தித்துத் திருமால் குன்றத்துக்கு அழைத்து வந்ததையும், நவநித்திலங்களைக் கொண்டு வந்து சேர்த்ததையும், புதிய நல்லடையாளச் சொல்லை நியமித்து அனுப்பியதையும், இனி விளைய இருக்கும் மேல் விளைவுகளையும் சிந்தித்தபடியே, சிலம்பாற்றில் நீராடச் சென்று கொண்டிருந்தார் அவர். நிழல் போல் அவரைப் பாதுகாத்துப் பின் தொடரும் ஆபத்துதவிகள் இருவர், ஒரு பனைத் தூரம் பின்னால் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர் சிலம்பாற்றின் கரையை அடைந்த போது வேறொரு திசையிலிருந்து எதிர்ப்பட்ட முனையெதிர் மோகர் படை வீரர்கள் இருவர் அவரிடம் ஏதோ சொல்ல வந்தவர்கள் போல வணங்கி நின்றனர். அவர்கள் கூற வந்ததைக் கேட்கக் கருதி அவருடைய விரைந்த நடை தயங்கியது. இந்த மூப்பிலும் அவர் நடை, மற்றவர்களால் உடன் தொடர முடியாத அளவு வேகமாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விரையும், அந்த நடையைத் தொடர முடியாமல், காராளரும், கொல்லனும், பிற வீரர்களும் பலமுறை சிரமப் பட்டிருக்கிறார்கள். நடையைப் போலவே பலவற்றில் அவரைப் பின் தொடர முடியாதவர்களாகவே இருந்தார்கள் அவர்கள்.

அவரை எதிர் கொண்டு வந்த முனையெதிர் மோகர் படை வீரர்கள், பணிந்த குரலில் கைxகட்டி நின்று கூறலாயினர்:-

“ஐயா! நேற்றிரவு திருமோகூர்க் கொல்லன் இங்கு அழைத்து வந்த கொற்கை நகரப் பிள்ளையாண்டான் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார். எழுப்பலாமா, கூடாதா என்றும் தெரியவில்லை. நேற்று இரவு எங்களிடம் ஒப்படைக்கும் போது, ‘காலையில் அந்தப் பிள்ளை தங்களைக் காண வேண்டியிருக்கும்’ என்று கூறி உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி அழைத்து வருகிறோம்...”

“வேண்டியதில்லை! அவன் உறங்கட்டும். நன்றாக உறங்கட்டும். அவனைப் போன்றவர்கள் உறங்கினாலும், விழித்திருந்தாலும் ஒன்றுதான்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/333&oldid=946550" இலிருந்து மீள்விக்கப்பட்டது