பக்கம்:நித்திலவல்லி.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

335



அவருடைய மறு மொழி கிடைத்ததும் விரைந்து திரும்பினார்கள் அவர்கள். ஏதோ சொல்ல நினைத்தவர் போல், அவர்களில் ஒருவனை மீண்டும் கை தட்டி அழைத்தார் அவர். இருவரில் ஒருவன் அவரருகே வந்தான். குரலை முதலில் தணித்து, அவன் காதருகே ஏதோ கூறிய பின்,

“ஞாபகம் வைத்துக் கொள் மறந்து விடாதே. மீண்டும் என்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும்” என்று எதையோ உரத்த குரலில் சொல்லி அவனை அனுப்பினார். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த வேரினால் தந்த சுத்தி[1] செய்து முடித்தார் அவர். வயதிலும் கட்டுவிடாமல் வரிசையாக மின்னிய வெண் பற்கள் அவருடைய தவம், உடலைப் பாதுகாத்திருக்கும் பான்மையைக் காட்டியது. சிலம்பாற்று நீர் படிகம் போல் இருந்ததனாலும், தெளிவின் காரணமாகவும், ஆழம் கண்டு பிடிக்க இயலாததாயிருந்தது. முழங்காலளவு கூட ஆழம் இராதோ என்று தோன்றிய நீரில் அவர் இறங்கி நின்றபின் அவருடைய உயரத்துக்கே மார்பளவு மூழ்கியது. தவத்தினால் மல மாசுகளைச் சுட்டெரித்த அந்தச் செம்பொன் மேனி நீர் நடுவே பெரிய செந்தாமரைப் பூ ஒன்று பூத்து நிற்பது போல் காட்சி அளித்தது.

ஆற்று நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்து, கிழக்கு நோக்கிக் கதிரவனை வணங்கி, நியமங்களைச் செய்த போது அவர் விழிகளில் தெய்வீக ஒளி மின்னியது. குளிர்ந்த நீரில் அமிர்தத்தைப் போல், உடலை நித்திய இளமையுடன் வாழ வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினார் அவர். தமிழில் நீர்மை என்ற பதத்துக்குக் குணம், பண்பு என்றெல்லாம் கூடப் பொருள் இருப்பதைப் பலமுறை சிந்தித்து வியந்திருக்கிறார் அவர். குணங்களின் உருவகமே பழகும் தண்ணீரின் மகத்துவத்தினால்தான் அமைகிறதோ என்று கூட அவர் நினைத்ததுண்டு. சிலம்பாற்று நீரோ மேனியில் மிருதுவான பட்டு ஒழுகுவது போல் படும் தன்மையை உடையது. பட்டுப் போன்ற பனி நீர் அவரை அதிக நேரம் விரும்பி நீராடச் செய்தது அன்று.


  1. பல் விளக்குதல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/334&oldid=946551" இலிருந்து மீள்விக்கப்பட்டது