பக்கம்:நித்திலவல்லி.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



‘கொல்லன் இந்நேரத்திற்குள் வையைக் கரையில் திருமருத முன்துறைக்குப் போய் அங்கே புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தி பரவச் செய்து விட்டு உடனே விடிவதற்குள் திருமோகூர் திரும்பிக் கொண்டிருப்பான்’ என்று நினைத்துக் கொண்டார் அவர். இந்தப் புதிய நல்லடையாளச் சொல் போய்ச் சேருவதற்குள், பழைய நல்லடையாளச் சொல்லை வைத்து எதிரிகள் எதுவும் குழப்பங்கள் புரிந்திருப்பார்களோ என்ற தயக்கமும் ஒரு கணம் அவர் மனத்தில் உண்டாயிற்று அப்போது. அப்படிக் குழப்பங்கள் நடந்திருக்க முடியாது என்பதும் அடுத்தகணமே அவருடைய மாசுமறுவற்ற மனத்தில் தெளிவாகத் தோன்றியது.

நீராடிக் கரையேறி மீண்டும் தம்முடைய தனி இடத்துக்குத் திரும்பி அவர் வழிபாட்டையும், நியமங்களையும் முடித்துக் கொண்டு எழுந்தபோது, காலையில் சந்தித்த முனையெதிர் மோகர்களில் ஒருவன் திரும்பி வந்து அவரைக் காணக் காத்திருந்தான்.

‘என்ன?’ என்று பார்வையாலேயே அவனை வினாவினார் அவர். அந்தக் கூரிய பார்வையில் உள்ளடங்கி நிற்கும் கேள்வியும், குறிப்பும் வந்தவனுக்குப் புரிந்தன. அவன் மெல்லிய குரலில் அருகே நெருங்கிக் கூறினான்:-

“ஐயா! இன்னும் கூட அந்தக் கொற்கை நகர்ப் பிள்ளையாண்டான் எழுந்திருக்கவில்லை. தாங்கள் கூறியனுப்பிய படி அவனுடைய வலது தோளின் மேற்பகுதியைப் பார்த்தேன். அங்கே சங்கு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. தங்கள் கட்டளையின்படியே இதைத் தங்களிடம் தெரிவித்து விட்டுப் போகவே வந்தேன்.”

“நல்லது! அவன் உறங்கி எழுந்ததும், நீராடிப் பசியாறிய பின், அவனை நீயே இங்கு என்னிடம் அழைத்து வர வேண்டும். இப்போது நீ போகலாம்” என்று அவனிடம் ஆணையிட்டு அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவன் புறப்பட்டுச் சென்ற பின்பும் சிறிது நேரம் வரை அவர் ஏதோ சிந்தனையில் இலயித்தவராக அங்கேயே நின்று கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/335&oldid=946552" இலிருந்து மீள்விக்கப்பட்டது