பக்கம்:நித்திலவல்லி.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கையும் தயங்கி நடுங்கியது. முகமும் இலேசாக இருண்டது. வேறு சில குறிப்புகளை எழுதும் போது அவர் கை விரைந்து உற்சாகமாக எழுதியது. முகத்திலும் கண்களிலும், ஒளியும், மகிழ்ச்சியும் மெல்லிய சாயல்களாகத் தென்பட்டன. களப்பிரர் கொடுங்கோலாட்சி ஒழிந்து, மீண்டும் பாண்டியர் பேரரசு தழைப்பதற்கான சாத்திய, அசாத்தியங்களை நாள்களாலும், கோள்களாலும் கணித்துப் பார்க்க முயன்றார் அவர். அவர் முகத்தில் மாறி,மாறி இருளும், ஒளியும் தெரிந்தன. சில நாழிகை நேரம் இந்தக் கணிப்பில் கழிந்தது.

அரும் பெரும் மூலிகை ஒன்றைப் பத்திரமாகச் சேகரித்து வைப்பது போல் அந்த மாபெரும் இரகசியங்களை இத்தனை காலமாகக் கட்டிக் காத்து வந்திருக்கிறார் அவர். பாண்டியர் மரபில் தோன்றிய மீதமிருந்த ஐவரில், இருவர் களப்பிரர்களால் கொலை செய்யப்பட்ட காலங்களையும் எண்ணிப் பார்த்தார் அவர். சுவடிகளில் அந்த இருவரின் பிறப்பு, வளர்ப்பு, நாள் கோள்களைப் பற்றிப் படித்தவுடன், அது தொடர்பான கழிவிரக்க நினைவுகளையும், துயரங்களையும் அவர் மனம் அடைந்தது. இறந்து விட்டவர்களைக் கழித்து, மீதியிருக்கும் மூவரைக் கணக்கிட்ட போது மூன்று முனைகளை உடைய ஒரு திரிசூலம்தான் அவருக்கு உருவகமாக நினைவில் தோன்றியது. அந்தத் திரிசூலத்திலும், ஒரு முனை மிகவும் மருங்கிக் குன்றிப் போயிருந்தது போல் பட்டது. தென்னவன் சிறுமலை மாறனும், திருக்கானப்பேர்ப் பாண்டியர் குல விழுப்பரையரின் பேரன் இளையநம்பியும், எவ்வளவிற்குக் கூர்மையாகவும், எதிரிகளைப் பாய்ந்து அழிக்கும் வல்லமை உடையவர்களாகவும் இருந்தார்களோ, அவ்வளவிற்கு மூன்றாமவனாகிய கொற்கைப் பெருஞ்சித்திரன் எதற்கும் பயனற்ற மந்தத் தன்மை உடையவனாக இருந்தான். பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இது முன்பே தெரியும் என்றாலும், இளையநம்பியையும், தென்னவன் மாறனையும் பற்றிய நம்பிக்கையில் இந்த மூன்றாமவனைப் பற்றிய பலவீனத்தை மறந்திருந்தார் அவர். எங்கெங்கோ மறைந்து வளர்ந்து வந்த இந்த மூவருமே, இப்போது பாண்டியர் கோநகரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/337&oldid=946554" இலிருந்து மீள்விக்கப்பட்டது